வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து மத்திய அரசு டிசம்பர் 7ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வெங்காயத்தின் மொத்த விலை மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்தில் மட்டும் சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இதனிடையே குறுவைப் பருவ வெங்காயம் வரத் தொடங்கினால் சந்தையின் தேவைக்கு போதுமான இருப்பு உள்ளது, இதனால் வெங்காயம் விலை இப்படியே தொடரலாம் அல்லது இன்னும் சற்று குறையலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

லாசன்காவ் சந்தையில் வெங்காயத்தின் சராசரி மொத்த விலை ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. மத்திய அரசு விதித்த தடைக்கு முன்பாக இந்த விலை ரூ.39 முதல் ரூ.40 வரை ஒரு கிலோவுக்கு இருந்தது.
உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முதலில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அறிவித்தது. பின்னர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு டிசம்பர் 7 ஆம் தேதியன்று முழுவதுமாக தடை விதித்தது. இந்த தடை அறிவிப்பு வெளியான உடனே வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கக் கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்த தடை ஆணையை மத்திய அரசு திரும்பப் பெறுவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்தைக்கு வெங்காயத்தை விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்தாலும் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு திரும்பப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் என்று மும்பையைச் சேர்ந்த வெங்காய ஏற்றுமதியாளர் அஜித் ஷா கூறியுள்ளார்.
குறுவை பருவத்தில் விளையும் சிவப்பு வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பதால் அதன் விலையை கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த வெங்காய வியாபாரியான நந்தகுமார் ஷிர்கே கூறுகையில், நாடு முழுவதும் வெங்காயத்துக்கான கிராக்கி குறையாமல் இருந்தால் அடுத்த சில நாட்களுக்குள் வெங்காய விலை ஸ்திரத்தன்மை அடையும் என்றார்.
லாசல்கான் சந்தையில் டிசம்பர் 6 ஆம் தேதியன்று இருந்த வெங்காய விலை ஏற்றுமதி தடையின் காரணமாக 47 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.லாசல்கான் சந்தைக்கு டிசம்பர் 19ஆம் தேதிவரை 3.66 லட்சம் டன் சிவப்பு வெங்காயம் வந்துள்ளது. இது 2022இல் வந்த வெங்காயத்தின் மொத்த அளவு 3.69 லட்சம் டன் ஆகும்.


Click it and Unblock the Notifications