சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்றைய கூட்டத்தில், நாடு முழுவதும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்தி, உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏழு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது மட்டும் அல்லாமல் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க முடியும்.
மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த உடன் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளும் நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சியை அதிகரித்து, நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து, அனைத்து குடிமக்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று திங்களன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த ஏழு திட்டங்களின் மொத்த செலவு ரூ.13,966 கோடி ஆகும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்
மேலும் அமைச்சர் இன்றைய கூட்டத்தைக் குறித்துப் பேசுகையில் "விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவர்களின் வருவாயை அதிகரிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஏழு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...
முதலாவதாக டிஜிட்டல் விவசாய மிஷன். இது விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. மேலும் சில நல்ல மாதிரி திட்டங்கள் கையில் எடுக்கப்பட்டுள்ளன, இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில், மொத்த முதலீடு ரூ.2,817 கோடியுடன், டிஜிட்டல் விவசாய மிஷன் அமைக்கப்படும்..." என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இன்று எடுக்கப்படும் முக்கிய முடிவுகளின் மொத்த லிஸ்ட் இதுதான்:
மத்திய அமைச்சரவை ரூ.2,817 கோடி செலவில் டிஜிட்டல் விவசாய மிஷனை அங்கீகரித்தது.
உணவு மற்றும் தேசிய ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான ரூ.3,979 கோடி திட்டத்தையும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை ரூ.2,291 கோடி மதிப்புள்ள விவசாய கல்வி, மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
அமைச்சரவை ரூ.860 கோடி மதிப்புள்ள தோட்டக்கலை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ரூ.71,702 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதார மேலாண்மை, உற்பத்தி திட்டத்தையும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை, மத்திய அரசின் கிருஷி விக்யான் கேந்திரா திட்டத்தை வலுப்படுத்த ரூ.1,202 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இதோடு இயற்கை வள மேலாண்மைக்கான ரூ.1,115 கோடி திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை.
விவசாய துறையைத் தாண்டி தொழிற்துறையில் 2 முக்கியமான திட்டங்கள்:
மகாராஷ்டிராவில் இரண்டு முக்கிய வணிக மையங்களான மும்பை மற்றும் இந்தூர் இடையே மிகக் குறுகிய ரயில் இணைப்பு திட்டமான 309 கிமீ நீளமுள்ள புதிய பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மொத்தம் ரூ.18,036 கோடி செலவில், 2028-29க்குள் முடிக்கப்படும்.
இந்திய செமிகண்டக்டர் மிஷனின் கீழ் கெய்ன்ஸ் செமிகான் பிரைவேட் லிமிடெட்டின் மேலும் ஒரு செமிகண்டக்டர் யூனிட்டை ரூ.3,300 கோடி முதலீட்டில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத்தின் சனந்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்கப்படும்.


Click it and Unblock the Notifications