மத்திய நிதியமைச்சகம் 2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணியில் இறுதிக்கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-க்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
குறிப்பாகக் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வராதா நிலையில் ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்பு மிகப்பெரியதாக வெடித்துள்ள நிலையில் தற்போது வந்துள்ள பிரச்சனை மோடி அரசுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
வட்டி சுமை
மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்காகவும், கொரோனா தொற்றைச் சமாளிக்கவும் அதிகளவிலான கடனை பெற்ற நிலையில் வட்டி செலுத்த வேண்டிய சுமை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் வட்டி சுமை பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், 2023ஆம் நிதியாண்டில் மீண்டும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பொருளாதாரம், வேலைவாய்ப்பு
பொருளாதாரம் வளர்ச்சியைச் சீர்படுத்த முடியாமலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வரும் மத்திய அரசு கூடுதல் கடன் மற்றும் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியது மோடி அரசுக்கு பெரும் சுமையாக உள்ளது.
15 சதவீதம் உயர்வு
மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கு வாங்கிய கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி தொகை 8.1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் தற்போது இதன் அளவு 15 சதவீதம் வரையில் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. கடந்த வருடம் 16.9 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
9.30 லட்சம் கோடி ரூபாய் வட்டி
இந்த உயர்வு மூலம் மத்திய அரசு ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட 8.1 லட்சம் கோடி ரூபாய் உடன் கூடுதலாக 1.20 லட்சம் கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதன் மூலம் 2023ஆம் நிதியாண்டில் மத்திய அரசு வட்டி தொகையாக மட்டுமே 9.30 லட்சம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
மத்திய அரசு வருவாய்
மத்திய அரசின் மொத்த வருவாயில் 45 சதவீத தொகை வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே 2022ஆம் நிதியாண்டில் செலவு செய்துள்ளது, இது 2012ஆம் நிதியாண்டில் 36.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது. நவம்பர் 2021 வரையில் மோடி அரசு கடனுக்கான வட்டியாக 4.6 லட்சம் கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாக CAG தரவுகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications