லட்சத்தீவு: மாலத்தீவைப் போன்ற ஒரு சுற்றுலா மையமாக லட்சத்தீவை மாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 8 மெகா திட்டங்களை கையில் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சிஎன்என் நியூஸ் 18 சார்பில் பிரத்தியேக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது முதல் லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளின் முக்கிய கவனம் பெற்ற இடமாக மாறி உள்ளது .

இந்த நிலையில் மாலத்தீவைப் போலவே மிகப்பெரிய சுற்றுலா மையமாக லட்சத்தீவை உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 8 மெகா திட்டங்களை வகுத்திருப்பதாக சிஎன்என் நியூஸ்18 வெளியிட்டுள்ள செய்தி சுட்டிக்காட்டுகிறது.
சிறு சிறு தீவுகளை லட்சத்தீவுடன் இணைக்கும் வகையில் கப்பல் போக்குவரத்து தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதற்காக முதல் கட்டமாக சிறு கப்பல்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை மேற்கொள்ள 303 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளியில் டிசம்பர் நான்காம் தேதி கோரப்பட்டுள்ளது.
லட்சத்தீவுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருகில் இருக்கும் சிறு சிறு தீவுகளுக்கும் சென்று கடலின் அழகை ரசிக்க முடியும் என்றும் ,கடல் சார்ந்த வாழ்க்கை அனுபவத்தை பெற முடியும் என்றும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. இதற்காக லட்சத்தீவை சுற்றியுள்ள சிறு சிறு தீவுகளிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கான பணிகளையும் அரசு கையில் எடுத்திருக்கிறதாம்.
லட்சத்தீவில் இருக்கும் அனைத்து தீவுகளிலும் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதற்கான உரிய கட்டமைப்புகளை அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி காட்மத்தில் முதல் கட்டமாக கப்பல் போக்குவரத்துக்கான கட்டுமானங்கள் தொடங்க இருக்கின்றன. லட்சத்தீவுகளின் மையத்தில் இருக்கக்கூடியது தான் தீவு காட்மத். மொத்தம் 3.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது, 9.3 கிலோமீட்டர் நீளமும் 0.57 கிலோ மீட்டர் அகலமும் கொண்டு இருக்கிறது.
இதே பகுதியில் பயணிகள் காத்திருக்கும் வரை மற்றும் அவர்களுக்கு தேவையான மற்ற வசதிகளை அரசு கொண்டுவர இருக்கிறதாம் .இது தவிர கல்பேனி, ஆந்தராத் ஆகிய தீவுகளிலும் இதே போன்ற நவீன வசதிகளை அரசு கொண்டுவர இருக்கிறது.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் நிதிகளின் கீழ் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகளை கொச்சின் துறைமுக ஆணையம் மேற்பார்வையிட இருக்கிறது. லட்சத்தீவு என்பது பல்வேறு சிறு சிறு தீவுகளின் ஒரு கூட்டமைப்பாகும்.
இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாகவும் இது இருக்கிறது. மொத்தம் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட லட்சத்தீவின் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர் 17 தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை.


Click it and Unblock the Notifications