இந்தியா தனது வர்த்தகத்தை மேம்படுத்த பல நாடுகள் உடன் முக்கியமான ஒப்பந்தங்களை செய்து வருகிறது, இதில் முக்கியமாக பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பின்பு பிரெக்சிட்-க்கு பின்பு பெரிய அளவிலான வளர்ச்சியை அந்நாட்டின் பொருளாதாரத்தில் காட்ட வேண்டும் என்ற இலக்குடன் பிரிட்டன் உள்ளது.
இதேவேளையில் இந்தியா தனது ஏற்றுமதி கனவுகளை நினைவாக்கவும், நீண்ட கால வர்த்தக உறவை மேம்படுத்த உலக நாடுகள் உடன் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் படி பிரிட்டன் உடன் சில முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

இந்த நிலையில் இந்திய அரசு பிரிட்டன் கார்கள், பிரிட்டன் நாட்டின் ஸ்காட்ச் விஸ்கி ஆகியவற்றின் மீதான வரியை குறைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதேபோல் பிரிட்டன் அரசு இந்திய மாணவர்கள், ஊழியர்களுக்கான சிறப்பு விசா விதிமுறைகளில் தளர்வு அளிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசும், ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசும் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை இரட்டிபாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒப்பந்தமும், வரி குறைப்பும், முக்கிய பிரிவுகளில் சந்தை அனுமதியும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்த வருடத்தின் இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் டெல்லியில் நடக்க உள்ள ஜி20 மாநாட்டில் நரேந்திர மோடி, ரிஷி சுனக் நேருக்கு நேர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் நடந்தால் சரக்கு, சேவை, முதலீடுகள் பிரிவில் அதிகம் கவனம் செலுத்தப்படும். இதற்கான பேச்சுவார்த்தையில் சிறப்பான முன்னேற்றம் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications