இந்தியாவில் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்க தொகை திட்டம் (production-linked incentive) அரசு எதிர்பார்த்த அளவு முடிவுகளை தரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அரசு கொண்டு வந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் திருப்தியான முடிவுகளை தரவில்லை என்பதால் மாற்று வழிகளை ஆராய தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடுகிறது.

2021-22ஆம் ஆண்டில் மத்திய அரசு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியாவில் குறிப்பிட்ட துறைகளில் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
குறிப்பிட்ட துறைகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு அவர்களின் உற்பத்தி அடிப்படையில் அரசு ஊக்க தொகையை வழங்கியது .தற்போது இது சம்பந்தமாக 14 திட்டங்கள் அமலில் இருக்கின்றன. அரசு 1.95 லட்சம் கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பும், எதிர்பார்த்த அளவு முடிவுகளும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக வாகன உற்பத்தி, செல் பேட்டரிகள், ஸ்டீல் மற்றும் ஆடை உற்பத்தி துறைகள் இதன் மூலம் பெரும்பளவில் வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பு உருவாகும் என அரசு எண்ணியது அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
2024 செப்டம்பர் மாத நிலவரப்படி அரசு ஒதுக்கீடு செய்த 1.95 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையில் இதுவரை 11,317 கோடி ரூபாய் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அரசு ஒதுக்கீடு செய்த தொகையில் ஆறு சதவீதம் மட்டுமே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பல்வேறு சிக்கல்களும் கடுமையான விதிமுறைகளும் இருப்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் பெரிய அளவில் உற்பத்தியாளர்களும் இதனால் ஈர்க்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே அரசு இந்த திட்டத்திலிருந்து மாற்று திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாம். அந்த வகையில் இந்தியாவில் காலணி மற்றும் தோல் உற்பத்தி துறைக்கு என பிரத்தியேக கவனம் செலுத்த அரசு முன் வந்திருக்கிறது.
இதன் மூலம் இந்த தொழில்களில் வடிவமைப்பு திறன் மற்றும் உற்பத்தி, அதற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு முக்கியம் கொடுக்க இருக்கிறதாம். இதன் மூலம் 2.2 மில்லியன் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இந்தியாவிலிருந்து 1.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி நடக்கும் என்றும் கூறப்படுகிறது .
அதே போல அரசு பொம்மை உற்பத்தியில் தனி கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பொம்மை உற்பத்தி மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கிறது.
இது தொடர்பாக திறன்களை வளர்ப்பது, உற்பத்தி மையங்களை நிறுவுவது மற்றும் மேட் இன் இந்தியா என்ற பிராண்டின் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த அதே நேரத்தில் உயர்தரம் கொண்ட சீனாவுக்கு மாற்றான பொம்மைகளை தயாரிக்கும் மையமாக இந்தியாவை மாற்றுவது என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என அந்த செய்தி குறிப்பிடுகிறது.எனவே அரசு படிப்படியாக பிஎல்ஐ திட்டத்தை கைவிட்டு விடும் என்றும் தெரிவிக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications