டொனால்டு டிரம்ப் வெற்றி இந்திய அரசின் செயல்பாடுகளில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. டிரம்ப் வெளிநாட்டுப் பொருட்கள் மீது அதிகப்படியான வரியை விதிக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில், இந்திய - அமெரிக்க வர்த்தக உறவில் எந்தவிதமான விரிசலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து துறையிலும் கொள்கை மாற்றங்களைக் கொண்டு வர தயாராகி வருகிறது.
இதில் முக்கியமான டிரம்பின் புதிய ஸ்டார் நண்பராக மாறியிருக்கும் எலான் மஸ்க்-ன் வர்த்தகத்திற்கும் இந்தியாவில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதில் முதலாவதாக ஸ்டார்லிங்க், இப்போது டெஸ்லா.

செயற்கைக்கோள் வாயிலாக அதிவேக பிராட்பேன்ட் சேவை வழங்கும் திட்டத்திற்கு இந்தியாவில் ஸ்பெக்ட்ரத்தை ஏல முறையில் தான் வழங்க வேண்டும் என ஜியோ மற்றும் ஏர்டெல் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், டிரம்ப் வெற்றி பெற்ற சில நாட்களில் மத்திய அரசு ஏலம் வாயிலாக அல்லாமல் நிர்வாக ரீதியாக பிரித்து தர முடிவு செய்தது. இது எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்ய நுழைவு வாயிலாக அமைந்தது.
இந்த நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் ஏற்கனவே கணித்தது போல், தற்போது மத்திய அரசு தரப்பில் டெஸ்லா-வை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் மீண்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்ய வரி தளர்வுகளை எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் கேட்டு வந்தது, ஆனால் இதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த மத்திய அரசு சில தளர்வுகளுடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஆனால் இந்த திட்டமும் பலன் அளிக்கவில்லை, டெஸ்லா நிறுவனம் மட்டும் அல்லாமல் எந்தொரு வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன நிறுவனமும் இப்புதிய திட்டத்தால் ஈர்க்கப்பட்டு முதலீடு செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் இத்திட்டத்தின் கொள்கையை மாற்றி டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவுக்கு வர பாதை அமைக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்வது குறித்து நிறுவனங்களுக்கு மத்தியிலான ஒரு வொர்க்ஷாப் வைத்து கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த திடீர் வொர்க்ஷாப் திட்டம் டொனால்டு டிரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நடந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்யப்படும் சிறப்பு முதலீட்டு திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது, இதன் மூலம் டெஸ்லா இந்தியாவுக்கு உடனே வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையில் இருந்து மந்தமான ரியாக்ஷன் வந்தது.
இதேவேளையில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசும் பல அதிரடி முடிவுகளை எடுக்கும் என திட்டமிட்டு வரும் வேளையில், மத்திய அரசு நிறுவனங்களுக்கு மத்தியிலான வொர்க்ஷாப் மூலம் கருத்துக்களை கேட்டு திட்டத்தின் கொள்கைகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது. இந்த 2வது முயற்சி மூலம் டெஸ்லா இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு கடந்த வருடம் அறிமுகம் செய்த திட்டத்தின் பெயர் Scheme to Promote Manufacturing of Electric Passenger Cars in India (SPMEPCI) இத்திட்டம் மீதான வொர்க்ஷாப் தான் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. எலான் மஸ்க், டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் சுமார் 124 பில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்துள்ளார். இதற்கான வெற்றியைத் தான் தற்போது எலான் மஸ்க் அறுவடை செய்து வருவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications