பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காப்பீட்டுத் துறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவர தயாராகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரில் இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்தும் பிரிந்துரை கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனாலும் இன்னும் அதிகப்படியான மக்கள் இன்சூரன்ஸ் பாதுகாப்பு பெறவில்லை. இன்சூரன்ஸ் துறையில் ஆயுள் காப்பீட்டில் துவங்கி பொது காப்பீட்டு வரையில் பல பிரிவுகளில் பல நிறுவனங்கள் உள்ளது.

ஆனால் இன்னும் இந்தியாவில் அதிகப்படியான மக்கள் மத்தியில் இன்சூரன்ஸ் பாதுகாப்பை முழுமையாக பெறவில்லை என்பது களநிலவரம். இதை மாற்றவும், இன்சூரன்ஸ் துறையில் புதிய நிறுவனங்கள், குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டு வர மத்திய அரசு இந்திய காப்பீட்டு துறையில் நேரடி அன்னிய முதலீட்டை (FDI) 100% ஆக உயர்த்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த நடவடிக்கையால் உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் நேரடியாக நுழைய வாய்ப்பை பெறும்.
தற்போது இந்திய காப்பீட்டு துறையில் FDI முதலீட்டு வரம்பு என்பது 74% ஆக மட்டுமே உள்ளது. இந்த வரம்பை உயர்த்துவதன் மூலம், அரசு அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முடியும், இதேபோல் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய நிறுவனத்தின் துணை இல்லாமல் இயங்கி சேவை அளிக்க முடியும்.
இதன் மூலம் இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தி, நிதி நிலையை மேம்படுத்தும். வெளிநாட்டு மூலதனத்தின் வருகையால் காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி, புதிய இன்சூரன்ஸ் ப்ராடெக்ட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த முடியும்.
தற்போது இந்தியாவில் 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், 26 பொது காப்பீட்டு நிறுவனங்கள், 6 தனிநபர் சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு மறுகாப்பீட்டு நிறுவனம் (General Insurance Corporation) உள்ளன.
இந்த நிலையில் இப்பிரிவில் FDI வரம்பை 100% ஆக உயர்த்துவதன் மூலம், மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்தத் துறையில் அதிகப்படியான நிதி பலத்துடன் புதிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும். இந்த 100 சதவீத முதலீடு மூலம் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் SBI, ICICI, HDFC, டாடா மற்றும் பிர்லா போன்ற உள்நாட்டு வர்த்தக குழுமங்களுக்கும் பெரிய அளவிலான நிதி ஆதாரம் கிடைக்கும்.
இந்த 100 சதவீத முதலீட்டு உடன் மற்றொரு முக்கிய சீர்திருத்தமாக, காப்பீட்டு முகவர் (Insurance Agent) மாடல் தாராளமயமாக்கல் செய்யப்படும். அதாவது மத்திய அரசு இப்புதிய சீர்திருத்தம் உடன் காப்பீட்டு முகவர்கள் ஒரு நிறுவனத்தின் காப்பீடுகளை மட்டுமே விற்காமல் பல காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீடுகளை விற்பனை செய்யும் வாய்ப்பை அனுமதிக்கும். இது முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான இன்சூரன்ஸ் ப்ராடெக்ட் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
இந்தியாவின் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதை இந்தியாவின் insurance penetration இன்டெக்ஸ் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். தற்போது வெறும் 4% ஆக இருக்கும் இந்த அளவீட்டை அதிகரிக்கும் திட்டத்துடன் இந்த 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கான பரிந்துரை வந்துள்ளது.


Click it and Unblock the Notifications