பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல வகையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளைச் செய்ய நிதி திரட்டி வருகிறது. இந்த முக்கியமான பணிகளில் ஒன்றாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக மத்திய அரசு, நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கும் ஆக்சிஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து விற்பனை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் மத்திய அரசின் கஜானாவுக்குச் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான நிதி சேர்ந்துள்ளது.
மத்திய அரசு முடிவு
மத்திய அரசு மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, மத்திய அரசு யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (SUUTI) நிறுவனத்தின் வாயிலாக ஆக்சிஸ் வங்கியின் 2 சதவீத பங்குகளை ஆபர் பார் சேல் பிரிவின் கீழ் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
4.4 சதவீத தள்ளுபடி
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் 704 ரூபாய்க்கு வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் மத்திய அரசு ஒரு பங்கை 4.4 சதவீத தள்ளுபடி உடன் ஒரு பங்கு 680 ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த விற்பனையின் கீழ் சுமார் 5.8 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது, இதன் வாயிலாக 4000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட உள்ளது.
முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
இந்தப் பங்குகளை வாங்க விரும்பும் ரீடைல் முதலீட்டாளர்கள் மே 20ஆம் தேதியும், ரீடைல் அல்லாத முதலீட்டாளர்கள் மே 19ஆம் தேதி வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மொத்த விற்பனையில் சுமார் 25 சதவீத பங்குகளை ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
UTI வங்கி டூ ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி முதலில் UTI வங்கியாக அளிக்கப்பட்டது, தற்போது பங்குகளை விற்பனை செய்யும் SUUTI நிறுவனமே ஆக்சிஸ் வங்கியின் ப்ரோமோட்டர்களில் ஒரு நிறுவனம். 2000ஆம் ஆண்டுக்குப் பின் வர்த்தகப் பிரிவு, நிர்வாக மாற்றத்தம், தனியார்மயமாக்கல் ஆகியவற்றுக்கு பின் ஆக்சிஸ் வங்கியாகப் பெயர் மாற்றப்பட்டது.
பங்கு இருப்பு அளவில் சரிவு
மார்ச் 2021 முடிவில் SUUTI நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் சுமார் 3.45 சதவீத பங்குகளை வைத்திருந்தது. தற்போது 2 சதவீத பங்குகளை விற்பனை செய்வது மூலம் மொத்த பங்கு இருப்பு அளவு 1.45 சதவீதமாகக் குறைய உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி பங்குகள் 704 ரூபாய்க்குத் துவங்கி 715.55 ரூபாய் வரையில் உயர்ந்தது. தற்போது கணிசமான சரிவை எதிர்கொண்டு 708 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications