சட்டமன்றத் தேர்தலை கடந்து தமிழ்நாட்டில் இன்று முக்கியமாக விவாதிக்கப்படக்கூடிய விஷயமாக மாறி இருக்கிறது தொகுதி மறு வரையறை (delimitation) மற்றும் மகளிருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடிய மசோதாக்கள்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை தொடர்ந்து மூன்று நாட்கள் சிறப்பு அமர்வு கூட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு அமர்வுக் கூட்டத்தில் நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய மூன்று முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்று தொகுதி மறு வரையறை மசோதா , இரண்டாவது யூனியன் பிரதேச தொகுதிகள் மறு வரையறை திருத்த மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா.

மக்களவையில் மசோதாக்களை தாக்கல் செய்ய முதலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வகையில் தாக்கல் செய்யலாம் என 251 உறுப்பினர்களும் அதற்கு எதிராக 175 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனை அடுத்து மூன்று மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மசோதாக்கள் நிறைவேறுமா இல்லையா என்பது நாளை மாலை தெரிந்து விடும். ஏனெனில் இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என மக்களவைத் தலைவர் ஓம் பில்லா அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இந்த மூன்று மசோதாக்களில் மிக முக்கியமானது தொகுதி மறு வரையறை மசோதா. இந்த மசோதாவுக்கு தென்னிந்திய மாநிலங்களிடமிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் தொகுதி மறு வரையறை என்பது மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை அல்லது எண்ணிக்கையை மாற்றியமைக்கும் ஒரு முக்கியமான ஜனநாயக செயல்முறை. ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை காலப்போக்கில் மாறுபடுகிறது. எனவே ஒரு தொகுதியில் மக்கள் தொகை அதிகமாகவும் மற்றொரு இடத்தில் குறைவாகவும் இருந்தால் வாக்காளர்களின் பிரதிநிதித்துவம் சமமாக இருக்காது என்பதற்காக தொகுதி மறு வரையறை என்பது செய்யப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது தொகுதி மறு வரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு தொகுதி மறு வரையறை செய்யும்போது தற்போது உள்ள மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கை 543 லிருந்து 850 ஆக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை என்பது செய்யப்படுகிறது இதற்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த மசோதா சட்டமானால் நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் கூடுதலான மக்கள் தொகை தொகுதிகளை பெறும். ஆனால் மொத்தமாக கணக்கிடும்போது தென் மாநிலங்களின் மொத்த மக்களவைத் தொகுதிகளின் பங்கீடு தற்போது இருக்கக்கூடிய 24.3%-ஐ விட குறையும் என சொல்லப்படுகிறது. எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு மசோதாக்களின் மீது முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரம் தென்னிந்திய மாநிலங்களின் வசம் இருந்து அதிக மெஜாரிட்டி கொண்ட வட மாநிலங்களின் வசம் சென்றுவிடும் என்கின்றன எதிர்க்கட்சிகள்.
பொருளாதார அடிப்படையில் இந்தியாவின் ஜிடிபி-க்கும் தொழில் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பு தரக்கூடியவையாக தென்னிந்திய மாநிலங்கள் இருக்கும்போது நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டங்களை இயற்றக்கூடிய அதிகாரத்தில் வட இந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக இருப்பது சரியல்ல என கூறுகின்றன. திமுக தரப்பில் இன்று கருப்புக்கொடி போராட்டமும் நடத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆவணங்களை எரித்து தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு இருந்தாலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிக தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும். இந்த மசோதாக்களை நிறைவேற்றும் போது ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 சதவீத ஆதரவு அல்லது குறிப்பிட்ட அவையில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
அப்படி பார்க்கும்போது மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.கூடுதலாக 71 எம்பிக்களின் வாக்குகள் தேவை. அதே வேளையில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது. மாநிலங்களவை என பார்க்கும்போது மொத்தம் 164 உறுப்பினர்களின் வாக்குகள் தேவை தேசிய ஜனநாயக கூட்டணி வசம் 141 வாக்குகள் உள்ளன அங்கும் 23 வாக்குகளை திரட்ட வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
ஒருவேளை மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது எதிர்க்கட்சியினர் திடீரென வெளிநடப்பு செய்தாலோ அல்லது எதிர்க்கட்சி எம்பிக்களில் சிலர் ஆதரவாக வாக்கு அளித்தாலோ நிலைமை பாஜக வசம் செல்லக்கூடும். எனவே நாளை மாலை இந்த மசோதா நிறைவேறுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications