நரேந்திர மோடி பிப்ரவரி 12ஆம் தேதி 2 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்று புதிதாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப்-ஐ நேரில் சந்தித்து பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேச உள்ளார். குறிப்பாக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கையில் எடுத்துள்ள Reciprocal tariffs விதிப்புகளும், வர்த்தக கொள்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேச உள்ளனர். இதோடு இந்த சந்திப்பில் 30க்கும் அதிகமான அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா வரியை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பொருளாதாரமும், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து மந்தமாக இருக்கும் வேளையில், அமெரிக்காவுடனான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது மோடி அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்-யிடம் பேச உள்ளார்.

நோமுரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதுடன், அமெரிக்க நிறுவனங்களின் ராணுவ உபகரணங்கள் மற்றும் எரிசக்தி பொருட்களை அதிக அளவில் வாங்க இந்தியா பரிசீலித்து வருவதாகவும், மோடி - டிரம்ப் சந்திப்பில் இதுதான் முக்கியமான விவாதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் சுமூகமான வர்த்தக உறவைப் தொடர்ந்து வைத்திருக்க இந்தியாவின் முயற்சி தான் இந்த வரி குறைப்பு. அண்மையில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில், மின்னணுப் பொருட்கள், டெக்ஸ்டைல் மற்றும் உயர் ரக மோட்டார் சைக்கிள்கள் போன்ற பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன.
தற்போது இந்தியா தானாக முன்வந்து வரி குறைப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் விதமாக மறு வரி விதிக்கும். தற்போது அமெரிக்கா மீது எந்தெந்த நாடுகள் எல்லாம் அதிகப்படியான வரியை விதித்துள்ளதோ அந்த நாடுகள் மீது அதே அளவுக்கான வரியை விதிக்கும் Reciprocal tariffs முறையை கையில் எடுத்துள்ளது.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா அதிக வரிகளை விதித்தால், அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு பதிலடி வரிகளை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது. உதாரணமாக, அமெரிக்க கார்களுக்கு இந்தியா 25% வரி விதித்தால், அமெரிக்கா இந்திய வாகனங்களுக்கு அதேபோன்ற வரியை விதிக்கும், இதை தான் Reciprocal tariffs அல்லது பதிலடி வரிகள் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு நியாயமானதாக இல்லை என்று அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் அதிக வரி விகிதங்கள் அமெரிக்காவின் பதிலடி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனாலேயே மோடி இந்த சுற்று பயணத்திவ் 30 பொருட்கள் மீதான வரியை குறைக்க உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குகிறது. 2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 18% அமெரிக்காவிற்குச் சென்றது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.2% ஆகும்.


Click it and Unblock the Notifications