இந்திய ஐடி சேவை துறை வேகமாக மாறி வருவதோடு, புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தனது உயர்மட்ட நிர்வாகத்தை வலிமைப்படுத்தும் பொருட்டு சக போட்டி நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகளை இழுத்து வருகிறது.
கொரோனா காலத்தில் அதிகப்படியான திட்டங்களை ஐடி நிறுவனங்கள் பெற்ற காரணத்தால் சக போட்டி நிறுவனத்தில் இருந்து மேனேஜர் வரையிலான ஊழியர்களை அதிகளவில் இழுந்து வந்தது மட்டும் அல்லாமல் 120 சதவீதம் வரையில் சம்பளம் கொடுத்தது.

ஆனால் இப்போது நிலைமை வேறு, ஐடி துறையில் தற்போது நிலவும் மந்த நிலை விரைவில் சரியாகும் எனக் கணிக்கப்படும் வேளையில், அடுத்த ரவுண்டில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற ரெடியாகியுள்ளது. 2020-2021 ஆண்டுகளில் தேவைக்கு அதிகமாக ஊழியர் படையைப் பெற்றுள்ள இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது, இவர்களை வழிநடத்தும் மூத்த அதிகாரிகளைத் தேடும் பணியில் உள்ளது.
ஏற்கனவே காக்னிசென்ட் நிறுவனம் விப்ரோ - இன்போசிஸ்-ல் இருந்து அதிகப்படியான ஊழியர்களை இழுத்துள்ளது பெரும் பிரச்சனையாகியிருக்கும் வேளையில் தற்போது டெக் மஹிந்திராவும் இதே பணியை செய்கிறது.
டெக் மஹிந்திராவின் புதிய சிஇஓ மற்றும் முன்னாள் இன்போசிஸ் BFSI பிரிவு தலைவரான மோஹித் ஜோஷி, திட்டமிட்டு முன்னாள் இன்போசிஸ் உயர் அதிகாரியை இழுத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா புதிய குளோபல் சீஃப் பீப்புள் ஆஃபீசராக ரிச்சர்ட் லோபோ என்பவரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. ரிச்சர்ட் லோபோ-வுக்கு ஹெச்ஆர் துறையில் சுமார் 25 வருடம் அனுபவம் உள்ளது, ஹெச்ஆர் டிரான்ஸ்பார்மேஷன் துவங்கி ஊழியர்கள் தொடர்பான அனைத்து சேவைகளிலும் பெரிய அனுபவம் கொண்டவர்.
2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தில் ரிச்சர்ட் லோபோ தனது நிர்வாகத் துறை தலைவர் மற்றும் முன்னாள் HR பிரிவு தலைவர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார். ரிச்சர்ட் லோபோ HR பிரிவின் தலைவராக 2015 முதல் 2023 வரையில் பணியாற்றியது மட்டும் அல்லாமல், இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தார்.
டெக் மஹிந்திரா நிறுவனம் மோஹித் ஜோஷி தலைமையில் புதிய நிர்வாகக் குழு உருவாக்கியிருக்கும் வேளையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான, திறமையான ஊழியர்களும், அணிகளும் தேவை. அதேபோல் நிறுவனத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழியர்கள் விருப்பத்துடனும், ஆர்வமாகவும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை டெக் மஹிந்திரா உருவாக்க வேண்டும்.
இத்தகைய முக்கியமான பொறுப்பைக் கையாள கட்டாயம் இத்துறையில் கைதேர்ந்த ஒருவர் அவசியம். குறிப்பாக வெளிநாடுகளில் ஊழியர்கள் கட்டமைப்பைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் தற்போது டெக் மஹிந்திராவுக்கு உள்ளது. இதன் வாயிலாகத் தான் ரிச்சர்ட் லோபோ புதிய Global Chief People Officer ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications