சென்னை: பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் செஸ் விளையாடவில்லை என உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் டிங் லிரெனை தோற்கடித்து 18 ஆவது FIDE செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார் குகேஷ்.

சென்னையை சேர்ந்த 18 வயதாக கூடிய குகேஷுக்கு இந்த சாம்பியன் பட்டத்தோடு சேர்ந்து 11.45 கோடி ரூபாய் பரிசு தொகையும் கிடைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் நுழைய உள்ளார் குகேஷ். இப்படி இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டுவதற்கு குகேஷூம் அவருடைய குடும்பத்தினரும் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.
குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, தொண்டை ,மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். ஆனால் தன்னுடைய மகனை போட்டிகளில் பங்கேற்க செய்ய பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக தன்னுடைய வேலையை கைவிட்டார். இதனால் அவருடைய தாயார் பத்மா குடும்ப பொறுப்பை ஏற்று வேலைக்கு செல்ல தொடங்கினார். இப்படி அந்த குடும்பமே குகேஷின் கனவுக்காக பல்வேறு தியாகங்களையும் செய்துள்ளது.
இந்த நிலையில் தான் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பேட்டி அளித்திருக்கும் குகேஷ், "இந்த போட்டி என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தருணம்" எனக் கூறியுள்ளார். "செஸ் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறேன் என முடிவு எடுத்த அந்த சமயத்தில் என்னுடைய குடும்பம் எனக்காக பல்வேறு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது.
என்னுடைய பெற்றோர் நிதி ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். தற்போது நாங்கள் சௌகரியமான ஒரு நிலையை எட்டி இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நான் செஸ் போட்டியில் பங்கேற்றதற்கு பணம் மட்டுமே காரணம் கிடையாது.
செஸ் விளையாட்டு என்றால் சிறு வயதிலிருந்து எனக்கு மிகவும் பிடிக்கும் சிறு வயதில் ஒரு சின்ன விளையாட்டு பொருளாக வாங்கப்பட்ட செஸ் போர்டு தான் தற்போது என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக அவருக்கு தொடர்ந்து வெற்றி முகமாகவே இருந்து வருகிறது. இந்திய வீரர்கள் தரவரிசையில் முகேஷ் முதல் இடத்தை பிடித்தார், கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார் மற்றும் தற்போது உலக செஸ் சாம்பியன் ஆகவும் உயர்ந்திருக்கிறார். இத்துடன் தன்னுடைய வெற்றி நின்று விடாது என்றும் இதில் நான் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது அவற்றையெல்லாம் நான் தொடர்ந்து கற்றுக் கொள்ளப் போகிறேன் என்றும் குகேஷ் கூறியுள்ளார்.
"எவ்வளவு சிறந்த வீரராக இருந்தாலும் அவர்களும் தவறு செய்வார்கள் .தற்போது செஸ் விளையாட்டில் தொழில்நுட்பங்கள் மேம்பட்டு விட்டாலும், அதில் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இதில் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள தான் நாம் நமக்கு இதுநாள்வரை தெரிந்ததெல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது புரியவரும்" என குகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications