இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகவும் மோசமாக இருந்தாலும் முதல் அலையில் ஏற்பட்ட அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கவில்லை.
ஆனால் முதல் அலையில் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத்திட்டத்தின் வாயிலாக ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியை மொத்தமாக 2வது அலை விழுங்கியுள்ளது.
இதேபோல் நீண்ட காலப் பொருளாதாரப் பாதிப்பையும் கொரோனா 2வது அலை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது. முதல் முறையாக ஒரு சர்வதேச அமைப்பு இந்திய பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதத்திற்கும் குறைவாகக் கணித்துள்ளது, சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Baa3 ரேட்டிங்
இதேபோல் மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பல தடைகள் உள்ள எனக் கூறி Baa3 என்ற ரேட்டிங்-ஐ கொடுத்துள்ளது. அதீத கடன், மோசமான நிதியியல் அமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி கணிப்பு அமோகம்
இதே மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு பிப்ரவரி மாதம் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பு ஆண்டில், அதாவது ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 13.7 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்தது.
-8 சதவீதம் வீழ்ச்சி
இதேபோல் மார்ச் 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் -8 சதவீதம் வரையில் சரிந்துள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு கணித்துள்ளது. இதுவரை இந்திய அரசு தரப்பில் இருந்து வளர்ச்சி அளவீடுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வரவில்லை.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன்
இந்திய பொருளாதாரம் சந்திக்கும் இந்தப் பாதிப்புக்கு மிக முக்கியமான காரணம் கொரோனா தொற்றும், கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் ஆகியவை நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு எனப் பலவற்றைப் பாதித்துள்ளது.
நிதி நிலை பாதிப்பு
வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் பாதித்துள்ளதால் வங்கிகளில் வாராக் கடனும், கடனை திருப்பிச் செலுத்த முடியாத கணக்குகளின் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் நிதிநிலையும் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications