நாட்டில் மக்களை கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் மக்களை பயமுறுத்தி வந்தாலும், மறுபுறம் இந்தியா பொருளாதாரம் குறித்த கணிப்புகள் அதைவிட மோசமாக இருக்கின்றன.
இது மிக மோசமான ஒன்றாக இருந்தாலும் கூட, உண்மையானதும் கூட. ஏனெனில் கொரோனாவினால் உலகமே ஸ்தம்பித்துபோயுள்ள நிலையில், அதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன?
நிச்சயம் இல்லை. ஒரு புத்தகத்தில் ஒரு நாடு நன்றாக இருந்தால் தானே மக்கள் வறுமை நீங்கி, பொருளாதாரத்தில் சிறந்தவர்களாக இருப்பர். தனி மனித வருமானம் அதிகரிக்கும் போது தான், நாட்டின் வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகமானால் நாடு செழிக்கும் என்று படித்திருக்கிறேன்.
உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கும் கொரோனா
ஆனால் இங்கு எதற்கும் வழியில்லாமல் போய்விட்டதே. கொரோனாவின் காரணமாக உலகமே செய்வதறியாது தவித்து வருகிறது. அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தினை எப்படி இந்த கொரோனாவிடம் இருந்து மீட்டெடுப்பது, முதலில் மக்களை கொரோனா என்னும் எமதர்மனிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதே, உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. மக்கள் நன்றாக இருந்தால் தானே ஒரு நாடு எதையும் சாதிக்க முடியும், சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.
பொருளாதாரம் குறித்து கவலை
இந்த மோசமானதொரு நிலையினை கருத்தில் கொண்டு மதிப்பீட்டு நிறுவனங்கள், வளர்ச்சியினை கணித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஆட்டம் கண்டு வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் குறித்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது.
மூடீஸ் என்ன சொல்கிறது?
இந்த நிலையில் மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் நிறுவனம், முன்னதாக இந்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. இதுவே வெறும் 2.5 சதவீதம் தானா? என்று கேட்கப்பட்ட நிலையில் தற்போது அதனை 0.2 சதவீதமாக குறைத்துள்ளது மூடீஸ். இதில் வேடிக்கை என்னவெனில் இந்த நிறுவனம் முன்னதாக 5.3 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து இருந்தது.
காரணம் என்ன?
ஆனால் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24 அன்று, நாடுதழுவிய ஊரடங்கினை அமல்படுத்திய நிலையில் 5.3 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக குறைத்தது. ஆனால் தற்போது கொரோனாவின் தாக்கம் இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இந்த ஊரடங்கு பெரும்பான்மையான இடங்களில் நீட்டிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் வளர்ச்சி
இதனையடுத்தே இந்த மதிப்பீட்டு நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம். இதே 2020ல் சீனா 1 சதவீத வளர்ச்சி காணும் என்றும், இதே 2021ல் 7.1 சதவீத வளர்ச்சியடையும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. ஜப்பானின் நோமுரா நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியினை 0.5% ஆகவும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு 0.9% ஆகவும் கணித்துள்ளன.
மற்ற நிறுவனங்கள் கணிப்பு
இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் 2.1%ல் இருந்து 1% குறைத்துள்ளது. இதே பிட்ச் ரேட்டிங்ஸ் 0.8% ஆகவும், கோல்டுமேன் சாச்சஸ் 2020 - 2021ம் ஆண்டிற்கான வளர்ச்சியினை 1.6% ஆகவும், இதே உலக வங்கி (2020 - 2021) வளர்ச்சியினை 1.5% ஆகவும். இதே சர்வதேச நாணய நிதியம் 1.9% ஆகவும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications