டெல்லி: மூன்லைட்டிங் குறித்தான சர்ச்சையானது சமீபத்திய காலமாக இருந்து வருகின்றது. இதனால் சில முன்னனி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையினை கூட எடுத்தன. குறிப்பாக ஐடி துறையில் இந்த மூன்லைட்டிங் பிரச்சனையானது பூதாகரமாக கிளம்பியது.
எனினும் ஊழியர்கள் மத்தியில் நிறுவனங்கள் சரியான சம்பளம் கொடுத்தால், நாங்கள் ஏன் இரண்டாவது வேலையை தேடி செல்ல போகிறோம் என்ற கேள்வியை எழுப்பினர்.
இது ஒரு புறம் எனில், மறுபுறம் இது சட்டபூர்வமாக சரியானதா? நிறுவனங்கள் மூன்லைட்டிங்கினை சுட்டி காட்டி பணி நீக்கம் செய்வது சரியானதா? என்ற கேள்வி பரவலாக அனைத்து துறைகளிலும் இருந்து வருகின்றது.
இது ஏமாற்று வேலையா?
மூன்லைட்டிங் என்று வரும்போது ஐடி துறையில் பலரும் இது தவறானது என கூறுகின்றனர். எனினும் சிலர் இது காலத்தின் தேவை என்று கூறுகின்றனர். சமீபத்திய அறிக்கை ஒன்றில் விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி இது குறித்து, தொழில்நுட்பத் துறையில் மக்கள் மூன்லைட்டிங்கில் ஈடுபடுவது ஒரு ஏமாற்று வேலை என்று கூறியிருந்தார்.
மோகன் தாஸ் பாய்?
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய், இந்த விஷயத்தில் மூன்லைட்டிங் ஏமாற்றுதல் என்று கருதவில்லை. வேலைவாய்ப்பு என்பது ஒரு முதலாளிக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஆகும், அவர் பணியாளர்கள் வேலை செய்ததற்காக சம்பளம் கொடுக்கிறார். அந்த நேரத்திற்குப் பிறகு பணியாளர் வேலை செய்வது அவரது சுதந்திரம் என்றும் அவர் விரும்பியதை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
சட்டப்படி சரியானதா?
இந்தியாவில் மூன்லைட்டிங் சட்டத்தின் கீழ் முற்றிலும் தடை செய்யப்படவில்லை. எனினும் தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் பிரிவு 60, நாட்டில் இரட்டை வேலை வாய்ப்பை தடைசெய்தாலும், அனைத்து மாநிலங்களின் கடை மற்றும் நிறுவன சட்டம் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். பெரும்பாலும் இது முதலாளிகள் மற்றும் அவர்களின் நியமன விதிமுறைகளைப் பொறுத்தது. இது ஊழியர்களை மூன்லைட்டிங் செய்ய அனுமதிக்கலாம் அல்லது அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
மூன்லைட்டிங்கில் ஈடுபடக் கூடாது
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில், சட்டத்தின் படி, ஒரு தொழிலாளி அவரின் முதலாளியின் விருப்பத்திற்கு எதிராக மூன்லைட்டிங்கில் ஈடுபடக் கூடாது. எனினும் அரசு இது குறித்து எந்த ஆய்வினையும் மேற்கொள்ளவில்லை என நாடளுமன்றத்தில் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐடி துறையில் பதற்றம்
பொதுவாக ஒரு நிறுவனத்தின் முழு நேர ஊழியர் கூடுதல் வேலையில் ஈடுபடும்போது, முதலாளிக்கு தெரியாமல் மற்றொரு வேலையில் ஈடுபடுவது மூன்லைடிங் என அழைக்கப்படுகிறது. கொரோனா தொற்று நோய்களின் போது பலரும் இரண்டு வேலைகளை பார்த்ததாக கூறப்படுகின்றது. இது குறிப்பாக ஐடி துறையில் அதிகளவில் காணப்படுகின்றது.
ஏன் நிறுவனங்கள் அச்சம்?
ஒருவர் பல நிறுவனங்களில் வேலை செய்யும் போது முதன்மை நிறுவனத்தின் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. இதனால் பணியின் முக்கியத்துவம் என்பது குறையும். அதோடு நிறுவனங்களின் தரவு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது. பணி சுமை அதிகரித்தால், அதனால் நிறுவனத்தின் பணிகள் தாமதமாகின்றன. ஒருவேளை போட்டி நிறுவனமாக இருந்தால், ரகசிய தகவல்கள் என்பது பகிரப்படலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. குறிப்பாக ஒரே துறையில் இத்தகைய பிரச்சனையானது இருந்தால், ஊழியர்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வேலையை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பணியின் தரமும் குறையலாம் என நிறுனங்கள் கவலைப்படுகின்றன.


Click it and Unblock the Notifications