குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற பகுதியில் கடந்த ஞாயிறு அன்று தொங்குபாலம் திடீரென அறுந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மோர்பி பாலத்தை சீரமைக்க ஓரேவா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், இந்த விபத்தால் அந்த நிறுவனத்திற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோர்பி பால விபத்து
மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும், பழமையான இந்த பாலத்தை சீரமைக்க கடந்த மார்ச் மாதம் ஓரேவா நிறுவனத்திடம் நகராட்சி நிர்வாகம் பணியை ஒப்படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓரேவா குழுமம்
அஜந்தா கடிகாரங்கள் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் ஓரேவா நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு பாலத்தை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துகொண்டதாக தெரிகிறது. அதனை அடுத்து இந்நிறுவனம் பார்வையாளர்களின் கட்டணத்தையும் நிர்ணயம் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவம் இல்லை
ஓரேவா நிறுவனம் தான் பாலம் சீரமைப்பு பணிகளை முழுமையாக மேற்கொண்டது. எனவே இந்நிறுவனம் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஓரேவா நிறுவனம் அஜந்தா கடிகாரங்கள், எலக்ட்ரிக் பைக் உள்பட பல்வேறு தொழிலில் ஈடுபட்டாலும், பாலம் பராமரிப்பதில் இதற்கு முன் இந்த நிறுவனத்துக்கு பெரிய அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது.
விசாரணை குழு
மோர்பி தொங்கு பால விபத்து குறித்து விசாரணை செய்ய குஜராத் அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவினர் விசாரணை செய்து இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது குறித்து கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் மீது தவறு?
மோர்பி பாலத்தை சீரமைக்க ஓரேவா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதால் இந்நிறுவனத்திற்கு இந்த விபத்தால் பெரும் சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர்கள் மட்டுமே செல்லலாம் என்ற விதி இருக்கும் நிலையில் சுமார் 400 பேர் விபத்து நடந்தபோது இருந்துள்ளதாகவும் நான்கு நாட்களில் சுமார் 12 ஆயிரம் பேர் இந்த பாலத்தை பார்வை விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த பாலத்தை நிர்வகிக்க பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஓரேவா குழுமத்தின் மீது தவறா? அல்லது அதிக பார்வையாளர்களை அனுமதித்த அதிகாரிகள் மீது தவறா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்.
வணிகங்கள்
ஒரேவா குழுமம் என்பது அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் மூலம் அகமதாபாத்தைச் சேர்ந்த குழுமம், லைட்டிங் தயாரிப்புகள், பேட்டரி மூலம் இயக்கப்படும் பைக்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரிக்கல் பாகங்கள் மற்றும் தொலைபேசிகள், கால்குலேட்டர்கள் மற்றும் எல்இடி டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications