சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் டெக் நிறுவனங்கள் சுமார் 27,000ம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருப்பது தெரியவந்துள்ளது . இன்டெல், ஐபிஎம், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இதில் அடங்கும். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் தொடங்கி சிறிய ஸ்டார்ட் அப்கள் வரை பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை தொடர்ந்து வருகின்றன.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 40 நிறுவனங்கள் 27,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளன. குறிப்பாக இன்டெல் நிறுவனம் சுமார் 15,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. அதாவது இன்டெல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்டெல் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததை அடுத்து செலவினங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் சுமார் 15,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது.
சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் சுமார் 7 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 6,000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால் அதற்கேற்ற வகையில் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்வதாகவும் இதற்காக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
ஐபிஎம் நிறுவனம் சீனாவில் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினை மூடியுள்ளது. இதன் மூலம் சுமார் 1000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். ஜெர்மனை சேர்ந்த சிப் மேக்கிங் நிறுவனமான இன்ஃபைனான் 1400 பேரை வேலையில் இருந்து நீக்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டது .நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியது. மேலும் 1400 ஊழியர்களை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
கோ ப்ரோ கேமரா தங்களது ஊழியர்களின் சுமார் 15 சதவீதம் பேர் அதாவது 140 பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் புக்ஸ் ஆப் மற்றும் ஆப்பிள் புக் ஸ்டோர் குழுக்களில் பணியாற்றி வந்த 100 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. புகழ்பெற்ற டெல் நிறுவனமும் தங்களுடைய நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது.
பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஷேர்சாட் நிறுவனம் 5% ஊழியர்கள் அதாவது 30 முதல் 40 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. செயல்திறன் அடிப்படையில் ஊழியர்களின் வேலைகளை மதிப்பாய்வு செய்து அதில் குறைந்த செயல் திறன் கொண்டவர்களை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 422 நிறுவனங்கள் மொத்தம் 1,36,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications