இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை என அதிருப்தியில் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய 47 சதவீத ஊழியர்கள் தங்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கிறார்களாம். அதேபோல தங்களுக்கு உகந்த ஊதிய உயர்வு கிடைப்பதே இல்லை என கூறியுள்ளார்களாம்.

குறிப்பாக ஐடி நிறுவனங்களில் மூன்று ஆண்டு காலம் வரையிலான பணி அனுபவம் கொண்ட ஊழியர்கள் தான் பெருமளவில் தங்களுடைய ஊதியம் குறித்து அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் தளம் ஒன்று ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களிடம் அவர்களின் தற்போதைய ஊதியம் எவ்வளவு, எத்தனை சதவீத ஊதிய உயர்வு எதிர்பார்க்கிறார்கள், இதுநாள் வரை அவர்களுக்கு கிடைத்த ஊதிய உயர்வு போதுமானதாக இருந்ததா என்பன உள்ளிட்ட கேள்விகளுடன் சர்வே நடத்தியது.
இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை குறைத்து விட்டன. இரண்டு இலக்கங்களில் ஊதிய உயர்வு பெற்ற ஐடி ஊழியர்கள் எல்லாம் இப்போது ஒற்றை இலக்கங்களில் தான் ஊதிய உயர்வு பெறுகின்றனர். இந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனங்கள் ஐடி ஊழியர்களுக்கு 5 - 8 சதவீதம் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்க இருக்கிறது. இன்போசிஸ் நிறுவனத்திலும் இது தான் நிலைமை.
இதனால் பலரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இப்படி ஒரு ஆய்வு அறிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் கிட்டதட்ட 59 சதவீதம் பேர் தங்களுடைய குறைந்த அளவு மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர் .13 சதவீதம் பேர் கணிசமான அளவு தங்களுக்கு உயர்வு கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர். 13 சதவீதம் ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வே கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதே போல நடப்பாண்டில் 35 சதவீதம் பேர் 10 சதவீதத்திற்குள் தான் தங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், 29 சதவீதம் பேர் 11 - 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், 14 சதவீதம் பேர் 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேக்ரோ பொருளாதார சூழல் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. இதனை காரணம் காட்டியும் சிக்கன நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஐடி நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை குறைத்துவிட்டன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications