மோசில்லா கார்ப்பரேஷனின் லாப நோக்கமற்ற நிறுவனமான மோசில்லா பவுண்டேஷன் தனது பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மோசில்லா பவுண்டேஷனின் இந்த 2-வது பணி நீக்கம் பணியாளர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணி புரியும் தகவல் தொடர்பு தலைவர் இரண்டாவது பணி நீக்கம் குறித்த அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பணி நீக்கம் மோசில்லா பவுண்டேஷனின் 30 சதவீத ஊழியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
TechCrunch-இன் அறிக்கையின் படி மோசில்லா பவுண்டேஷனின் தகவல் தொடர்பு தலைவரான பிராண்டன் போர்மேன் ஈமெயில் மூலமாக பணி நீக்கங்களை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பணி நீக்கம் ஊழியர்களை மிகவும் திறமையானவர்களாக மாற்றவும், நிறுவனத்தின் தொழில்நுட்ப எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளதாக பிராண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பணி நீக்கத்தின் காரணமாக மோசில்லா பவுண்டேஷன் சில பணிகளை நிறுத்த உள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த பணி நீக்கங்களை அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மோசில்லா நிறுவனம், ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரை உருவாக்குவதில் ஈடுபட்ட பல பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. இந்த இரண்டாவது பணி நீக்கம் குறித்த அறிவிப்பை மோசில்லா பவுண்டேஷனின் நிர்வாக இயக்குனரான நபிஹா சையத் அக்டோபர் 30-ஆம் தேதி அன்று ஊழியர்களுக்கு ஈ-மெயில் மூலமாகத் தெரிவித்தார்.
மோசில்லா நிறுவனம் மட்டுமின்றி ஜெர்மனியை தளமாகக் கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Bosch நிறுவனனமும் பணி நீக்கங்களை அறிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பல்வேறு ஆலைகளில் பணிபுரிகின்ற 7000 ஊழியர்களை இந்த பணி நீக்கம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவில் Bosch நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
அதிகரித்து வரும் பணி நீக்கங்கள் தொழில்துறையில் அச்சுறுத்தல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது . தினசரி அடிப்படையில் பல முன்னணி நிறுவனங்களும் பணி நீக்கம் குறித்த செய்திகளை வெளியிடுவது சாப்ட்வேர் இன்ஜினியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேரடியாக பணி நீக்கங்களில் ஈடுபடாமல் சில நிறுவனங்கள் "சைலன்ட் ஃபயரிங்" என்று சொல்லப்படும் டெக்னிக்கை கையில் எடுத்து வருகின்றன. சைலன்ட் ஃபயரிங் என்பது ஒரு ஊழியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அவர்களை தாமாகவே வேலையை விட வைக்கும் யுக்தியாகும்.
தற்போதைய வேலைச்சந்தையில் பணிநீக்கங்கள் மற்றும் சைலன்ட் ஃபயரிங் அதிகரித்து வருவதால் தங்கள் வேலையில் எப்படி நிலையாக இருப்பது என்பது குறித்து பல ஊழியர்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இனிவரும் காலங்களில் இதே வேலை வாய்ப்பின்மை தொடருமா? அல்லது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சி பல்வேறு பணிகளில் ஊழியர்களின் தேவையை அதிகரிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications