அமெரிக்கா: யூடியூப் போன்ற தளங்களில் ஒரு சேனலை உருவாக்கிக்கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை உலகிற்கு தெரிய வைக்கும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கு தற்போது சமூகத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்கள் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். யூடியூப் தளத்தில் உலகிலேயே அதிக சப்ஸ்கிரைபர்கள் வைத்திருப்பவரின் தகவல் வெளியாகி உள்ளது.
மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனல் தான் உலகிலேயே அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல் என தெரிய வந்துள்ளது. இதன் உரிமையாளர் ஜிம்மி டொனால்ட்சன் இதனை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழியாக என அவர் இந்த படத்தினை பதிவிட்டுள்ளார்.

டி சிரீஸ் என்ற இசை நிறுவனம் தான் இதற்கு முன்பு யூடியூப் தளத்தில் அதிக சந்தாதாரர்களைக் கொண்டிருந்த ஒரு சேனலாக இருந்தது. தற்போது அதனை மிஞ்சி மிஸ்டர் பீஸ்ட் சேனலானது 266 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளது. மிஸ்டர் பீஸ்டை பொறுத்தவரை எக்ஸ் தளத்தில் 29.7 மில்லியன் ஃபாலோவர்களையும் இன்ஸ்டாகிராமில் சுமார் 57 லட்சம் ஃபாலோவர்களையும் கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி டொனால்ட் சன், மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தன்னுடைய 13ஆவது வயதிலிருந்து யூடியூப்பில் வீடியோ பதிவு செய்து வருகிறார். அதாவது 2012 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய யூடியூப் பயணத்தை தொடங்கினார். தன்னுடைய 26 வது வயதில் தான் அவர் பிரபலமானார்.
மிஸ்டர் பீஸ்ட் சேனலின் மூலம் வீடியோக்களை பதிவு செய்து மட்டுமே மாதந்தோறும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் கூட சிக்கிக் கொள்வார் .
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இவர் யூடியூபராக இருந்து வந்தாலும், 2017க்கு பின்னர் தான் அவர் மிகவும் பிரபலமான நபராக மாறத் தொடங்கினார். தான் சம்பாதிக்கும் பணத்தில் பல்வேறு தொண்டு காரியங்களையும் செய்து வருகிறார். இவற்றையும் அவர் அடிக்கடி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
மிஸ்டர் பீஸ்ட் மட்டுமல்லாமல் மிஸ்டர் பீஸ்ட் 2 ,மிஸ்டர் பீஸ்ட் கேமிங், பீஸ்ட் ரியாக்ட் என்பன உள்ளிட்ட 6 சேனல்களை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அவர் சொந்தமானவராக இருக்கிறார். யூடியூப் புகழ் மற்றும் வருமானம் இவரை பல மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாக்கி இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications