ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இருக்கிறது. சிஎஸ்கே விளையாடும் போட்டி என்றால் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் அதனை உனிப்பாக கவனிப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு புகழ் பெற்றிருப்பதற்கு காரணமே மகேந்திர சிங் தோனி தான்.
முதன்முதலில் 2008இல் ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட போதே சிஎஸ்கே அணியின் முகமாக விளங்கி வருபவர் தோனி. சென்னை அணி பல்வேறு கோப்பைகளை வெல்லவும் காரணமாக இருந்தவர். இன்றும் கூட இவர் கிரவுண்டில் இறங்கி விளையாட மாட்டாரா என லட்சக்கணக்கான ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருகின்றனர். ஆனால் அண்மை காலமாக அவர் அணியில் இருந்தாலும் பெரும்பாலும் விளையாடுவதில்லை. ஒன்று இரண்டு போட்டிகளில் மட்டுமே தல தரிசனம் கிடைக்கும்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே சிஎஸ்கே அணியுடன் பிரிக்க முடியாத பந்தம் கொண்டுள்ள தோனி, அணியின் உரிமையிலும் ஒரு பங்கை வாங்க விரும்பி உள்ளார். இது தொடர்பாக அவர் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் உரிமையாளர்களுள் ஒருவராக தோனி மாறுவார் என சொல்லப்பட்டது.
இது தொடர்பாக அணியின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அது எதிர்பார்த்தபடி சுமூகமாக முடியாமல் தோல்வியில் முடிந்துவிட்டன என்றும் தகவல்கள் வெளியாகியுளன. வீரராக மட்டுமன்றி, அணியின் நிர்வாக மட்டத்திலும் தனக்கான புதியதொரு பங்கை வகிக்க தோனி திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால் இது நிறைவேறாமல் போயுள்ளது.
இதனால் கடந்த 18 ஆண்டுகளாக சென்னை அணியின் அடையாளமாக இருந்து வரும் தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையேயான உறவு கேள்விக்குறியாகியுள்ளது என தகவல்கள் தெரிவ்க்கின்றன. கடந்த காலங்களில் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த தோனி தொடர்ந்து இந்த அணியிலேயே நீடிப்பாரா, சிஎஸ்கே அணி என்ன ஆகும் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
தோனிக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையில் ஏதேனும் முறண்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றனவா என்பதே கிரிக்கெட் உலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. தோனி முதலில் அணியின் 25% பங்கினை வாங்க முயற்சி செய்ததாகப்வும் ஆனால் சிஎஸ்கே உரிமையாளர் 3% பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் CricBlogger செய்தி கூறுகிறது.
இறுதியாக தோனி 18% பங்குகளை விலை கொடுத்து வாங்க முன் வந்ததாகவும் சிஎஸ்கே உரிமையாளர் 5%க்கு மேல் தர முடியாது என தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சிஎஸ் கே நிர்வாகத்துக்கும் தோனிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சிமெண்ட் நிறுவனம் 2008இல் முதலில் சிஎஸ்கே அணியை வாங்கியது. அப்போது என்.ஸ்ரீனிவாசன் தான் இதன் தலைமை நிர்வாகியாக இருந்தார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற தனி நிறுவனமே உருவாக்கிய அவர் அதன் கீழ் கிரிக்கெட் அணி நிர்வாகத்தை கொண்டு வந்தார்.


Click it and Unblock the Notifications

