இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெலிகாம் நிறுவனமான மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (MTNL) செவ்வாய்க்கிழமை பங்கு சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் முக்கியமான தகவலை வெளியிட்டு அதன் முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
BSNL போல் MTNL நிறுவனமும் சேவையிலும், வர்த்தகத்திலும் மீண்டு வரும் என நம்பிக்கையில் மக்கள் தொடர்ந்து MTNL பங்குகளில் வர்த்தகம் செய்து வரும் வேளையில் எம்டிஎன்எல் பங்குச்சந்தைக்கு அனுப்பிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MTNL தனது வர்த்தகத்திற்காக வாங்கிய கடன் மற்றும் வட்டியை பல பொது துறை வங்கிகளுக்கு உரிய நேரத்தில் செலுத்த தவறியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் சுமார் ரூ.8,585 கோடி மதிப்பிலான அசல் மற்றும் வட்டியை செலுத்த தவறியுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றைய வர்த்தகத்தில் MTNL பங்குகள் 4.80% சரிந்து ரூ.49.59-ஆக குறைந்தது. இன்றைய வர்த்தகத்தில் இப்பகுகள் 0.90 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் அதிகப்படியாக 51.20 ரூபாயும், குறைவாக 49.38 ரூபாய் அளவையும் எட்டியுள்ளது. இப்பங்கின் 52 வார உயர்வு என்பது 101.93 ரூபாயாக உள்ளது.
MTNL ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலக்கட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ரூ.8,585 கோடி நிலுவை தொகையில் ரூ.7,794.34 கோடி அசல் தொகை மற்றும் ரூ.790.59 கோடி வட்டியை பாக்கி வைத்துள்ளது.
MTNL நிறுவனத்திற்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, UCO வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை கடன் அளித்துள்ளது.
MTNL நிர்வாகம் வங்கி கடன்கள், அரசு உத்தரவாத பத்திரங்கள் மற்றும் தொலைத் தொடர்பு துறை (DoT) இலிருந்து பெறப்பட்ட கடன்கள் என மொத்தம் ரூ.34,484 கோடியை கடனாக பெற்றுள்ளது. இதை தொடர்ந்து வங்கிகள் எத்தகைய நடவடிக்கை எடுக்கும் என்பதை இனி தெரிய வரும். இல்லையெனில் மத்திய அரசு தலையிட்டு கடனை தள்ளுபடி செய்யுமா அல்லது வாராக்கடன் பிரிவில் சேர்க்குமா அல்லது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் MTNL நிறுவனத்துடன் சேர்க்கப்படுமா என்பதையும் காத்திருத்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications