இந்திய ஸ்னாக்ஸ் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதற்காக முகேஷ் அம்பானி கையில் இருக்கும் ஆயுதம் Snactac, Alan's Bugles, மற்றும் Independence என்ற 3 முக்கியமான பிராண்டுகள்.
இந்தியாவில் குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா தவிர வேறு யாராலும் நுழைய முடியாது என்ற நிலை இருந்த போது முகேஷ் அம்பானி இந்தியாவில் பல தசாப்தங்களாக இருந்த கேம்பா கோலா பிராண்டை மொத்தமாக வாங்கி நாடு முழுவதும் மிகவும் குறைந்த விலையிலும், விற்பனையாளர்களுக்கு அதிகப்படியான மார்ஜின் உடனும் விற்பனை செய்து பெரும் புரட்சியை செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

தற்போது கேம்பா கோலா வர்த்தக முறையை பெப்சி, கோகோ கோலா பின்பற்ற வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் குளிர்பான சந்தையில் ஆதிக்க நிலை என்பது தகர்க்க துவங்கியுள்ளது. இதேபோன்ற ஒரு ஆட்டத்தை தற்போது ஸ்னாக்ஸ் பிரிவிலும் ஆட முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் Snactac, Alan's Bugles, மற்றும் Independence என்ற 3 முக்கியமான பிராண்டுகள் உடன் இந்திய ஸ்னாக்ஸ் சந்தையை கலக்க தயாராகி வருகிறது.
போட்டி மிகுந்த ஸ்னாக்ஸ் சந்தையில் தனது வர்த்தக நிலையை உறுதி செய்ய ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் அதிக வர்த்தக லாபத்தை வழங்குகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் குறைந்த காலகட்டத்தில் அதிக விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களை ஈர்க்கும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் தனது Snactac, Alan's Bugles, மற்றும் Independence பிராண்டுகள் மூலம் சிப்ஸ், நம்கீன், பிஸ்கட்களை விற்பனை செய்ய உள்ளது. இந்த பிராண்டுகளின் தயாரிப்புகளின் சூப்பர் ஸ்டாக்ஸ்டர்கள் 6.5% வரையிலும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 8% வரையிலும் லாபம் அளிக்கிறது. சில்லறை விற்பனையாளர்களுக்கு 20% வரையில் லாபம் அளிக்கிறது.
இதற்கு மாறாக, இத்துறையில் இருக்கும் போட்டியாளர்கள் சூப்பர் ஸ்டாக்ஸ்டர்களுக்கு 3-5%, விநியோகஸ்தர்களுக்கு 6-6.5%, மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 8-15% லாபத்தை மட்டுமே வழங்குகிறார்கள். இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது விநியோகத்தை அதிகரிக்க லாபத்தை அதிகரிக்கிறது.
இந்த உக்தி மூலம் இந்திய ஸ்னாக்ஸ் சந்தையில் வேகமான விநியோக தளத்தைப் பெற முடியும், இதன் மூலம் பல போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கலைக்க முடியும் என்பது தான் முகேஷ் அம்பானியின் திட்டம்.


Click it and Unblock the Notifications