இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. கடந்த மார்ச் 1 முதல் 3 ஆம் தேதிவரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து இத்தாலியில் உல்லாசப் படகு சவாரி என கேளிக்கைகள் தொடர்ந்தன. இந்த திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் மும்பையில் இன்றுடன் முடிகிறது. நாளை பாந்த்ரா- குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

உலகளவில் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ள இந்த பிரமாண்டமான திருமணத்துக்காக இந்தியர்கள் உண்மையில் செலவு செய்யும் அளவுக்கு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி செலவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
அம்பானி குடும்பத்தார் உண்மையில் தங்களது சொத்து மதிப்பில் 0.5 சதவீதம் தான் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்காக செலவு செய்கிறது என்று தேசிய பைனான்சியல் அட்வைஸரி சர்வீஸஸ் தலைவர் நிதின் சௌத்ரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சொத்து வைத்துள்ள ஒரு இந்தியர் தங்களது பிள்ளைகளின் திருமணத்துக்காக சர்வசாதாரணமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு செய்வார்கள். ரூ.10 கோடி சொத்து வைத்திருப்பவர்கள்கூட ரூ.1.5 கோடி செலவு செய்வார்கள். இது இந்தியர்கள் சாதாரணமாக தங்களது இல்லத் திருமணத்து்க்காக செலவிடும் 5 முதல் 15 சதவீதம் வரை இருக்கும்.
அம்பானி குடும்பத்தின் இந்தத் திருமணத்துக்காக செய்யப்படும் செலவு ரூ.5,000 கோடி இருக்கும். இது முகேஷ் அம்பானியின் 123.2 பில்லியன் டாலர் சொத்தில் ஒரு சிறு துளியாகத்தான் இருக்கும்.
திருமண நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும், கார்ப்பொரேட் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த வாரம் கனடா நாட்டு பாப் இசை கலைஞர் ஜஸ்டீன் பீபர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சிக்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்காக பாடி மகிழ்வித்தார்.
மெஹந்தி சடங்கை தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதியன்று திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் சுப ஆசிர்வாத சடங்கு, 14 ஆம் தேதியன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் இந்த வைபவம் சீரும் சிறப்புமாக நிறைவடைகிறது.
ஜாம்நகரில் மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற மேற்கத்திய இசை பாடகி ரிஹானாவின் கச்சேரி இடம் பெற்றது. இதில் 1200க்கும் மேலான விருந்தினர்கள் வந்திருந்தனர். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மே மாதத்தில் ஐரோப்பிய உல்லாச படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 800 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இதனிடையே நாளை நடைபெறும் திருமணத்துக்காக மும்பையில் பல்வேறு போக்குவரத்து விதி மாற்றங்களை போலீஸார் செய்துள்ளனர். திருமணம் நடைபெறும் ஜியோ சென்டருக்கு செல்லும் வழியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 12 முதல் 15 ஆம் தேதி வரை மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை இந்தக் கட்டுப்பாடுகள் தொடரும்.
திருமணத்துக்காக அம்பானியின் அன்டிலியாவின் 27 மாடிகளும் மஞ்சள் நிற சர விளக்குகளாலும் மரிக்கொழுந்து மலர்ச்சரங்களாலும் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு தங்க மாளிகை போல அன்டிலியா ஜொலிக்கிறது.
திருமணத்துக்காக ஃபால்கன் 2000 ரக 3 ஜெட் விமானங்களும் 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்களும் விருந்தினர்களுக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக கிளப் ஒன் ஏர் நிறுவன தலைமை எக்ஸிகியூட்டிவ் ராஜன் மெஹ்ரா கூறினார்.
Story written by: jayachandran


Click it and Unblock the Notifications