உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு எல்லாம் என்ன மாதிரியான கஷ்டங்கள் வரும்.
உலகிலேயே காஸ்ட்லி வீட்டில் வசிக்கிறார். பல விலை உயர்ந்த கார்கள், உடைகள், பல நாட்டு உணவுகள் என எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
ஒரே ஒரு சொடக்கு போட்டால் என்ன என்று கேட்க நூற்றுக் கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள், பிறகு இவருக்கு எல்லாம் என்ன கவலை இருக்கும்..? என்று கேட்கிறீர்களா..?

முதலிடம்
வளர்ச்சி தான் இவர்களின் கவலையாக இருக்கலாம். ஒவ்வொரு நொடியும் தங்களை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள் பணக்காரர்கள். முகேஷ் அம்பானி கூட, அப்படித் தான்மெல்ல வளர்ந்து, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அடுத்து ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிற பட்டத்தை வென்றார்.

60 பில்லியன் டாலர்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சுமாராக 48 சதவிகித பங்குகளை நம் முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார். இது தான் இவரின் சொத்து மதிப்பை பெரிய அளவில் உயர்த்த காரணமாக இருந்து வருகிறது. இந்த ரிலையன்ஸ் பங்கு கடந்த டிசம்பர் 2019-ல் உச்சத்தில் இருந்த போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 60.8 பில்லியன் டாலரை வரை தொட்டது. ஆனால் இப்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 42.2 பில்லியன் டாலராக சரிந்து இருக்கிறது.

எப்படி
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் உச்ச விலையாக, 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் நேற்று ரிலையன்ஸின் பங்கு விலை சுமாராக 1,115-ல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு விலை உயர திணறியது என்றே சொல்லலாம்.

12 ஆண்டுகளில் இல்லாத சரிவு
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை நேற்று ஒரே நாளில், 166 ரூபாய் (13 சதவிகிதம்) சரிந்தது. ரிலையன்ஸின் உச்ச விலையான 1,617 ரூபாயில் இருந்து, 1,115 ரூபாய் என்றால் கடந்த 3 மாத காலத்துக்குள் சுமாராக 502 ரூபாய் சரிந்து இருக்கிறது.

அதே பங்கு தான் வீழ்ச்சி
இப்போது அதே ரிலையன்ஸ் பங்கின் விலை 1,617 ரூபாயில் இருந்து 1,115 ரூபாய்க்கு சரிந்ததால், முகேஷ் அம்பானி வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் விலையும் சரிந்து, ஒட்டு மொத்த சொத்து மதிப்பும் 42.2 பில்லியன் டாலருக்கு சரிந்துவிட்டது. ஆக அம்பானி, மார்ச் 2019 உடன் ஒப்பிட்டால் சுமாராக 7.8 பில்லியன் டாலர் நஷ்டம் கண்டு இருக்கிறார். இந்திய மதிப்பில் சுமாராக 56,000 கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்.

ஜாக் மா
இந்த நேரத்தில், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ஜாக் மா-வின் சொத்து மதிப்பு, 44.5 பில்லியன் டாலராக இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை, செய்தி வெளியிட்டு இருக்கிறது. அம்பானியை விட அதிகம் சொத்து வைத்திருப்பதால், தற்போதைக்கு ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக ஜாக் மா மீண்டும் தன் இடத்தைப் பிடித்து இருக்கிறார் என்றும் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ். ஆக, நம் முகேஷ் அம்பானி, ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில், இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.