இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரும், நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்கள் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காகப் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
சமீபத்திய தகவல்களின்படி, மே 28 முதல் 30ம் தேதி வரை தெற்கு பிரான்ஸ் கடற்கரையோரத்தில் ஒரு சொகுசு கப்பலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் நடைபெற இருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே குஜராத் ஜாம்நகரில் ஜாம்ஜாம் என முதலாவது ப்ரீ வெட்டிங் நடந்த நிலையில் திருமண நிகழ்ச்சிகள் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அடங்கி பிரைவேட் நிகழ்ச்சியாக லண்டனில் முகேஷ் அம்பானி வாங்கிய ஸ்டோக் பார்க்-ல் நடக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை, ஆனாலும் இதுகுறித்து தகவல்கள் காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது.
இந்த இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்கள் சொகுசு கப்பலில் மூன்று நாள் நடக்க உள்ளது. இத்தாலியில் இருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் நிறைவுபெறும் இந்த சொகுசு கப்பல் பயணத்தில் தான் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
சுமார் 800 விருந்தினர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும், கப்பலில் உள்ள அனைத்து விருந்தினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய 600 ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 2365 கடல் மைல்கள் (4380 கி.மீ) தூரம் பயணம் செய்யவுள்ளது. குறிப்பிடத்தக்க விதமாக, மார்ச் மாதத்தில் நடைபெற்ற முதல் ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தில் ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிராமல் மற்றும் கோகிலாபென் அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
குஜராத் ஜாம்நகரில் நடைபெற்ற ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்திற்காக மட்டும் சுமார் ரூ.1260 கோடி செலவழிக்கப்பட்டதாகவும், கேட்டரிங் ஒப்பந்தத்திற்கே ரூ.200 கோடி செலவழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நாளை மறக்க முடியாததாக மாற்றுவதற்காக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி மிகப்பெரிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடம்பர திருமணத்திற்காக அம்பானி குடும்பத்தினர் எடுத்துவரும் பிரம்மாண்ட ஏற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications