சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புற்றுநோய் துறையில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்பம் சார்ந்த ஒரு ஹெல்த்கேர் நிறுவனமான கர்கினோஸ்-ஐ கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து வரும் சுகாதாரத் துறையில் தனது சேவை தளத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ஹெல்த்கேர் துறையில் பல நிறுவனங்களில் பங்குகளையும், சிலவற்றை மொத்தமாகவும் வாங்கியுள்ளது. டெக் அடிப்படையிலான சேவை மட்டும் அல்லாமல் நேரடியாக ஹெல்த்கேர், பார்மா துறையில் இயங்கும் நிறுவனங்களையும் தனது சாம்ராஜ்ஜியத்தின் கீழ் வைத்துள்ளது. இந்த நிலையில் புற்றுநோய் துறையில் இயங்கும் ஒரு டெக் அடிப்படையிலான Karkinos Healthcare என்னும் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்டிரேடஜிக் பிசினஸ் வென்ச்சர்ஸ், டிசம்பர் 27, 2024 அன்று கர்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
முகேஷ் அம்பானி ஒரு பங்கு விலை ரூ.10 விகிதத்தில் சுமார் 1 கோடி பங்குகளை பெற்றுள்ளது. இதை தாண்டி இதே ரூ.10 விலையில் டிபென்ச்சர் 36.5 பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் கர்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தை மொத்தமாக 375 கோடி ரூபாய் தொகைக்கு வாங்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்ட கர்கினோஸ் ஹெல்த்கேர், புற்றுநோயை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிதல், நோயறிதல் மற்றும் சிகிச்சை மேலாண்மைக்கான புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குதல் மற்றும் வழங்குவதில் முன்னோடியாக உள்ளது. 2022-23 நிதியாண்டில், கர்கினோஸ் நிறுவனம் சுமார் ரூ.22 கோடி வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் மொத்தமாக கையகப்படுத்துவதற்கு முன்னதாக, கர்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் டாடா சன்ஸின் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மற்றொரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் டிஜிட்டல் ஹெல்த் லிமிடெட், அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக், ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் யுத் ஸ்போர்ட்ஸ் மற்றும் முன்னாள் ஐபிஎல் சிஇஓ சுந்தர் ராமன் மற்றும் முன்னாள் டாடா மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ரவி காந்த் ஆகியோர் முக்கிய முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications