ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது கூட்டணி நிறுவனமான வியாகாம் 18 மீடியாவில், அதன் முக்கிய கூட்டாளியான பாரமவுண்ட் குளோபல் நிறுவனம் வைத்திருந்த 13.01% பங்குகளை சுமார் 4,286 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்த தகவலை மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரிலையைன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி உறுதியான உடனேயே பாரமவுண்ட் குளோபல் நிறுவனம் தனது பங்குகளை விற்க முன்வந்தது மட்டும் அல்லாமல் அதை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் முன்வைத்தது.

சற்றும் யோசிக்காமல் பாரமவுண்ட் குளோபல் நிறுவனம் வைத்திருந்த 13.01% பங்குகளை சுமார் 4,286 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய மீடியா துறையில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இந்தியா கூட்டணி மிகப்பெரிய உச்சத்தை எட்ட உள்ளது, இப்போது இந்த 4,286 கோடி ரூபாய் மதிப்பிலான 13.01% பங்குகள் 2 மடங்கு வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் பாரமவுண்ட் குளோபலின் இரண்டு துணை நிறுவனங்கள் இடையே பங்கு விற்பனை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், வியாகாம் 18 நிறுவனத்தில் பாரமவுண்ட் குளோபல் வைத்திருந்த 13.01% பங்குகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தவுள்ளது.
இந்த பரிவர்த்தனை முடிவடைந்த பிறகு, வியாகாம் 18 நிறுவனத்தில் ரிலையன்ஸ் பங்குகள் முழுமையாக 70.49% ஆக உயரும். தற்போது, வியாகாம் 18 நிறுவனத்தில் ரிலையன்ஸ், 57.48% பங்குகளை மட்டுமே வைத்துள்ளது.
வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா-வின் புதிய கூட்டணி சுமார் 8.5 பில்லியன் டாலர் அதாவது 70,352 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருக்கும். இக்கூட்டணி நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.34% பங்குகளையும், வயாகாம் 18 46.82% பங்குகளையும், டிஸ்னி 36.84% பங்குகளை வைத்திருக்கும்.
இதோடு நீதா அம்பானி இந்த கூட்டு நிறுவனத்தின் தலைவராகவும், உதய் ஷங்கர் துணைத் தலைவராகவும் இருந்து வழிகாட்டுவார்கள் என்று கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் தலா ஒரு ஸ்ட்ரீமிங் சேவையையும், 120 தொலைக்காட்சி சேனல்களையும் கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் 28 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ரிலையன்ஸ் சுமார் 8.5 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனத்துடன் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.
இந்த கூட்டணி நிறுவனம், இந்திய விளம்பர சந்தையில் பெரும்பகுதியைக் கைப்பற்றும். இதனால் ஒளிபரப்பு நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்று, எலாரா செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கரண் தவுரானி கடந்த வாரம் தெரிவித்தார்.
வயாகாம் 18 மற்றும் டிஸ்னி இணைப்பு, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான்.காம் நிறுவனத்தின் பிரைம் வீடியோ+மினிடிவி போன்ற போட்டி நிறுவனங்களைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications