மும்பை: கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. அக்டோபர் 8ஆம் தேதி சரிவிலிருந்து இந்திய பங்குச்சந்தை சற்றே மீண்டுள்ளது. இருந்தாலும் இந்த கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் பங்குச்சந்தை சரிவு காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வேகமாக சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு சரிவடைந்து, முதலீட்டாளர்கள் 2.1 லட்சம் கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்திய பங்குச்சந்தைகளே சரிவடைந்து இருப்பது இதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இதனிடையே பங்குச்சந்தை சார்ந்த தரகு நிறுவனமான ஆம்பிட் கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளை விற்கலாம் என்று மதிப்பீட்டில் வைத்துள்ளது. இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது மந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2600 ரூபாய் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 2764 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 80 டாலர்களை கடந்துள்ளது. இதன் காரணமாக இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரியும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என 25 பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும், வைத்து இருக்கலாம் என 8 பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும், விற்பனை செய்து விடலாம் என 3 தரகு நிறுவனங்களும் பரிந்துரை செய்துள்ளன. ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் புரமோட்டர்கள் 50.33 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 8.37 சதவீத பங்குகளையும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 21.59 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இதில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது மியூச்சுவல் ஃபண்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்குகளை குறைத்துள்ளன.
Written by: Devika


Click it and Unblock the Notifications