இந்தியாவின் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தீபாவளி பண்டிகைக்கான வர்த்தகத்தையும், பல லட்சம் புதிய வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு வரும் இந்தப் பிசியான காலகட்டத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.
ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் முன்னணி வெளிநாட்டு டெக் மற்றும் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்ற நிலையில், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தில் கூகுள், பேஸ்புக், குவால்கம் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைவராக இருக்கும் Breakthrough Energy Ventures நிறுவனத்தில் முகேஷ் அம்பானி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பில் கேட்ஸ் தலைவராக இருக்கும் Breakthrough Energy Ventures நிறுவனத்தில் சுமார் 50 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகள் அடுத்த 8 முதல் 10 வருடத்திற்குள் பல பிரிவுகளாகப் பிரித்து முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம்
தற்போது உலக நாடுகள் முழுவதும் மிக முக்கியப் பிரச்சனையாக விளங்கும் பருவநிலை மாற்றம் (Climate Crisis) குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு எனர்ஜி மற்றும் விவசாயம் துறையில் புதிய தீர்வுகளையும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா
இந்நிறுவனத்தின் முயற்சிகள் அனைத்தும் இந்தியாவிற்குப் பெரிய அளவில் உதவும், இதனால் நாட்டு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை அளிக்கும். இதுமட்டும் அல்லாமல் முதலீட்டுக்குப் பெருமளவிலான லாபம் கிடைக்கும் என ரிலையன்ஸ் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இந்த முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்பே முதலீட்டுத் தொகை பரிமாற்றம் செய்யப்படும். மேலும் இந்த முதலீடு முழுவதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தால் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ப்ரோமோட்டர்களுக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
உலகப் பணக்காரர்கள்
இந்த முதலீட்டின் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது பணக்காரர் பில் கேட்ஸ் மற்றும் 8வது பணக்காரர் முகேஷ் அம்பானியும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications