இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவராகவும், இந்தியாவின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் முகேஷ் அம்பானி எடுத்த பல முக்கிய முடிவுகள் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது மட்டும் அல்லாமல், பல நிறுவனங்களுக்கு வர்த்தகத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் பாடமாகவும் அமைந்தது என்றால் மிகையில்லை.
உதாரணமாக திருபாய் அம்பானி காலத்தில் செல்போன் வைத்திருக்க வேண்டும் என்றால் பெரும் பணக்காரராக இருக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் சாமானிய மக்களுக்கு 500 ரூபாய்க்கு CDMA போன் அறிமுகம் செய்தது முதல் 2016ல் ஜியோ அறிமுகம் செய்யும் போது இலவச சிம், இலவச 4ஜி டேட்டா என வாடிக்கையாளர்களைக் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் ஈர்த்து டெலிகாம் சந்தையில் புரட்சி செய்தார்.

இந்திய இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டில் பெரும் புரட்சி செய்தது, சமீப காலமாக 10 ரூபாய், 20 ரூபாய் என தனது சொந்த தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வந்து FMCG பிரிவில் பெரும் புரட்சி செய்தது வரையில் அம்பானி குடும்பத்தினர் தொடர்ந்து வர்த்தக சந்தையை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
இதை அனைத்தையும் கடந்து, ஒரு டெலிகாம் நிறுவனம் எப்படி வேகமாகவும், சுமையில்லாமல் இயங்க முடியும் என்பதை மிகவும் எளிதாக 2019ல் உலக நாடுகளுக்கு காட்டினார் முகேஷ் அம்பானி.
உலகம் முழுவதும் டெலிகாம் நிறுவனங்கள் எதிர்கொண்டு வந்த பிரச்சனையை அம்பானியின் ராஜதந்திரத்தின் மூலம் மிகவும் எளிதாக சமாளித்த கதை தான் இது.
ஒரு டெலிகாம் நிறுவனம் இயங்க வேண்டும் என்றால் செல்போன் டவர், நிலத்திற்கு அடியில் செல்லும் பைபர் ஆப்டிக் கேபிள் போன்ற பல Physical சொத்துக்கள் தேவை, ஆனால் அவை அனைத்தும் நீண்ட கால அடிப்படையில் மதிப்பு இழக்கும் ஒரு விஷயம் என்பதால் காலம் காலமாக டெலிகாம் நிறுவனங்கள் இதில் பெரும் பணத்தை இழந்தது மட்டும் அல்லாமல் டெலிகாம் நிறுவனங்களின் நிதி கணக்கில் இது பெரும் சுமையாகவே இருந்து வந்தது.
இந்த ஒரு கடன் மற்றும் மதிப்பு இழக்கும் சொத்துக்களை முறையாகக் கையாண்டால் போதும் எந்தொரு டெலிகாம் நிறுவனமாக இருந்தாலும் சரி எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்.
முகேஷ் அம்பானி ஜியோ-வை அறிமுகம் செய்வதற்கு முன்பே இதற்கான மெகா திட்டத்தைத் தீட்டி 2019ல் அதைச் செயல்படுத்தினார்.
ஜியோ நிறுவனத்திலிருந்த 1.30 லட்சம் டெலிகாம் டவர்கள் மற்றும் அனைத்து பைபர் ஆஃப்டிக் சொத்துக்களைத் தனியாகப் பிரித்து அதாவது நிதியியல் கணக்கில் இருந்தும், நிறுவனத்தில் இருந்தும் தனியாகப் பிரித்து ஒரு இன்பரா முதலீட்டு டிரஸ்ட் (InvIT) கீழ் கொண்டு வந்தார்.
தனி டிரஸ்ட் ஆக கொண்டு வந்தது மூலம் தனியார் நிறுவனங்களும், சர்வதேச முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்ய முடியும் என்பதை திட்டமிட்டே இந்த மாற்றத்தை செய்தார்.
முகேஷ் அம்பானி கணக்கு போட்ட படியே கனடா நாட்டின் ப்ரூக்பீல்டு இன்பரா பார்ட்னர்ஸ் 100 சதவீதம் பங்குகளை இந்த முதலீட்டு டிரஸ்ட்-ல் கைப்பற்றி ஜியோவுக்கு ரூ.25,215 கோடி கொடுத்தது. இது 2019ல் இந்தியாவுக்கு வந்த மொத்த முதலீட்டு தொகையில் சுமார் 6 சதவீதமாகும்.
அம்பானியின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவென்றால் டெலிகாம் சொத்துக்களை விற்பனை செய்துவிட்ட கையோடு இந்த சொத்துக்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள 30 வருட Master Services Agreement போடப்பட்டது தான்.
இதன் மூலம் ஒரு சொத்தை விற்பனை செய்துவிட்டு, அதே சொத்தை யாருக்கும் பங்கு போடாமல் பயன்படுத்த ஒப்பந்தம் செய்தார் முகேஷ் அம்பானி. இந்த டெலிகாம் டவர்களை பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் கட்டணம் மட்டும் செலுத்தி வருகிறது ஜியோ.
இந்த நிர்வாகக் கட்டமைப்பு மூலம் தொடர்ந்து மதிப்பு இழக்கும் சொத்துக்களை ஜியோவிடம் இருந்து வெளியேறி, அதேவேளையில் அதை முழுமையாகப் பயன்படுத்தவும் வழி உருவானது. இதற்கு ஈடாக பெரும் தொகை முதலீடாகவும் பெற்று டபுள் ஜாக்பாட் அடித்தார் முகேஷ் அம்பானி.
இந்த ஒரு திட்டம் உலகளாவிய டெலிகாம் நிறுவனத்தால் பாராட்டப்பட்டது மட்டும் அல்லாமல் பாலோ செய்யவும் துவங்கியது.
உதாரணமாக வோடோபோன் 2021ல் டவர் சொத்துக்களை Vantage Towers பெயரில் மாற்றி பட்டியலிட்டு 2023ல் தனியார் நிறுவனத்திற்கு விற்றது. இதேபோல் Deutsche Telekom, அமெரிக்காவின் AT&T, Verizon என உலகின் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனமும் முகேஷ் அம்பானியின் ஃபார்மூலாவை பாலோ செய்தது.


Click it and Unblock the Notifications