இந்தியாவிலேயே அதிக மதிப்பு மிக்க நிறுவனமாக இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். இதன் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவார். உலகளவிலும் பணக்காரர்கள் பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தனக்கு ஊதியம் வேண்டாம் என மறுத்துள்ளாராம். கொரோனா காலத்தில் எடுத்த முடிவினை தற்போதும் பின்பற்றி வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உலகமே ஸ்தம்பித்து போனது. பொதுமுடக்கம் காரணமாக தொழில்கள் முடங்கிப் போயின. இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த முகேஷ் அம்பானி கொரோனா பொதுமுடக்கத்தையொட்டி தனக்கு எந்த ஊதியமும் வேண்டாம் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரோனா பெரும் தொற்று முடிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இருந்தாலும் தொடர்ந்து நான்காவது ஆண்டாக அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த ஊதியத்தையும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு நிதி அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் முகேஷ் அம்பானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் என்ற வகையில் எந்த ஒரு ஊதியத்தையும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அம்பானி தானாகவே முன்வந்து தன்னுடைய ஊதியம், அலோவென்ஸ் மற்றும் பிற நிதி பலன்கள் வேண்டாம் என மறுத்து இருந்தார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதை அவர் தொடர்வது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்னதாக அதாவது 2008 - 2009 ஆம் ஆண்டிலிருந்து முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 15 கோடி ரூபாயை ஆண்டு ஊதியமாக பெற்றார். தற்போது ஊதியம் எதையும் பெறவில்லை என்றாலும் நிறுவனத்தில் இருக்கும் பங்குகள் மூலம் அவருக்கு கிடைக்கும் லாபமே பெரியதாக இருக்கிறது.
ரிலையன்ஸ் அம்பானி குடும்பத்தினை பொருத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை கொண்டிருக்கின்றனர்.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 61 வயதாக கூடிய முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. உலக அளவில் அவர் பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications