இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்தடுத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் காரணத்தாலும், தான் இருக்கும் அனைத்து வர்த்தகத்திலும் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவதாலும், புதிதாக அறிவித்துள்ள கிளீன் எனர்ஜி திட்டத்தாலும் இந்நிறுவனப் பங்குகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
100 பில்லியன் டாலர்
இந்த மாபெரும் வளர்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது.
இதன் மூலம் அமேசான் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் ஆகியோர் இருக்கும் 100 பில்லியன் டாலர் கிளப்-ல் முதல் முறையாக முகேஷ் அம்பானி சேர்ந்துள்ளார்.
முகேஷ் அம்பானி
தீருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் அவருடைய மறைவிற்குப் பின்பு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தை 2005ல் முகேஷ் அம்பானி பெற்றார். இந்தியாவில் வேகமாக வளர்ந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகமும் உயர்ந்தது.
ரீடைல், டெக்னாலஜி, ஈகாமர்ஸ், டெலிகாம்
வெறும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவில் மட்டுமே இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி நிர்வாகத்தின் கீழ் ரீடைல், டெக்னாலஜி, ஈகாமர்ஸ், டெலிகாம் என பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
2020 கொரோனா தொற்றால் இந்தியா மொத்தமும் முடங்கிய நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் பல லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அசால்ட்டாக கைப்பற்றி ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடையத் துவங்கியது.
நிறுவன கைப்பற்றல்
இந்த முதலீட்டுச் சுற்றுக்குப் பின்பு சந்தையில் இருக்கும் பல நிறுவனங்களை அடுத்தடுத்து கைப்பற்றத் துவங்கியது. இதன் மூலம் மிகவும் குறைவான காலகட்டத்திலேயே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையத் துவங்கியது.
புதிய இரண்டு திட்டங்கள்
இதற்கிடையில் சமீபத்தில் கிளீன் எனர்ஜி திட்டத்தில் 4 முக்கிய தொழிற்சாலைக்காக சுமார் 75,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம் அறிவிப்பு, ஜப்பான் 7eleven இந்திய வர்த்தகத்தின் மாஸ்டர் பிரான்சைஸ் வர்த்தகத்தைக் கைப்பற்றி, மும்பையில் இன்று முதல் கடையைத் துவங்க உள்ளது.
ரிலையன்ஸ் பங்குகள் உயர்வு
அடுத்தடுத்து அறிவிப்புகள் வாயிலாகவும், இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தாலும் ரிலையன்ஸ் பங்குகள் மீது முதலீடுகள் அதிகரித்து அதன் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் 2021ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 23.8 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
11வது ஆளாக முகேஷ் அம்பானி
இதன் வாயிலாக முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 100 பில்லியன் டாலர் கிளப்-ல் 11வது ஆளாக முகேஷ் அம்பானி சேர்ந்துள்ளார். ஆனால் இதேவேளையில் டெஸ்லா எலான் மஸ்க் சொத்து மதிப்பு 222 பில்லியன் டாலராக உயர்ந்து 200 பில்லியன் டாலர் கிளப்-ல் சேர்ந்துள்ளார். சரி 100 பில்லியன் டாலர் கிளப்-ல் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா..?
முதல் 3 இடம் யாருக்கு
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 222 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 52.4 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 191 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 549 மில்லியன் டாலர் உயர்வடைந்துள்ளது. பெர்னார்ட் அர்னால்ட்-ன் மொத்த சொத்து மதிப்பு 156 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 41.2 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ்-ன் மொத்த சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 3.81 பில்லியன் டாலர் சரிவடைந்துள்ளது. மனைவியின் விவாகரத்து மூலம் அதிகளவிலான சரிவு ஏற்பட்டு உள்ளது.
பேஸ்புக்
பில் கேட்ஸ்-ஐ தொடர்ந்து பேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 123 பில்லியன் டாலர் கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 19.5 பில்லியன் டாலர் உயர்வடைந்துள்ளது.
கூகுள் தலைவர்கள்
கூகுள் நிறுவனரான லாரி பேஜ்-ன் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 42.1 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது, இதேபோல் செர்ஜி பிரின்-ன் மொத்த சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலர் கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 40.3 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
லாரி எலிசன் - ஸ்டீவ் பால்மர்
லாரி எலிசன்-ன் மொத்த சொத்து மதிப்பு 108 பில்லியன் டாலர் கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 28.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ஸ்டீவ் பால்மர்-ன் மொத்த சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர் கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 25.3 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
வாரன் பஃபெட்-ன்
பங்குச்சந்தை முதலீட்டில் சூப்பர் ஹீரோவாக விளங்கும் வாரன் பஃபெட்-ன் மொத்த சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 15.7 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி
100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு வைத்துள்ளோர் பட்டியலில் 11வது இடத்தை இந்தியரான முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர். கடந்த ஒரு வருடத்தில் இவருடைய சொத்து மதிப்பு 23.8 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications