இந்திய ரீடைல் சந்தை மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வந்துள்ளது, குறிப்பாகக் கடந்த 10 வருடத்தில் மக்கள் அதிகளவில் ஆடம்பர சந்தையை மற்றும் ப்ரீமியம் பொருட்களை நோக்கி அதிகம் செல்ல துவங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களும் குறைந்த விலையில் விற்கக்கூடிய பொருட்களை ப்ரீமியம் பொருட்களாக விளம்பரம் செய்து அதிக மார்ஜின்-க்கு விற்க துவங்கியுள்ளது.
இதனால் அடித்தட்டு மக்கள், லோவர் மிடில் கிளாஸ் மக்களால் அதிகப்படியான பொருட்களை வாங்க முடிவது இல்லை. பெரிய நிறுவனங்களும் ப்ரீமியமாக பொருட்களை விற்கும் காரணத்தால் அவர்களுக்கான லாபம், மார்ஜின் ஆகியவை எட்டப்படுகிறது.

இவ்விரண்டுக்கும் மத்தியில், இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி மக்களை நாம் வர்த்தக சந்தை மறந்துவிட்டது. இதை கவனித்த ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தங்களுடைய ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் வாயிலாகச் சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் பொருட்கள் சந்தையில் (FMCG) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு புதிய மற்றும் மாறுபட்ட உத்தியுடன் களமிறங்கியுள்ளது. ரிலையன்ஸ் சுமார் 60 கோடி இந்திய நுகர்வோரை இலக்காகக் கொண்டு, தரமான பொருட்களை மலிவு விலையில் வழங்குவதிலும், ரீடைல் கடைகளுடன் இணைந்து கூடுதல் லாபம் அளிக்கும் கட்டமைப்புடன் செயல்படுவதிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம், தேசிய அளவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) நிறுவனத்தின் இயக்குனர் டி.கிருஷ்ணகுமார் இத்திட்டம் குறித்துக் கூறுகையில் "இந்தியாவில் சுமார் 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர். இதில் சுமார் 600 மில்லியன் அதாவது 60 கோடி மக்கள் குறைந்த வருமான பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த பிரிவு மக்களுக்காக தரமான பொருட்களை உருவாக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவு மக்கள், இந்தியா முழுவதும் இருப்பது மட்டும் அல்லாமல் இதுவரையில் தேசிய அளவில் ஒரு தெளிவான அணுகுமுறையுடன் இந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு எந்த நிறுவனமும் இதுவரையில் முயற்சிக்கவில்லை. இதேவேளையில் சில பிராந்திய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் இம்மக்களை அடைய முயற்சி செய்தாலும் அவர்களால் தொடர்ந்து சந்தையில் நிலைத்திருக்க முடியவில்லை, பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் முடியவில்லை என்றும் கிருஷ்ணகுமார் குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நாடு முழுவதும் ரிடைல் கடைகளை வைத்திருந்தாலும் தனது சொந்த மற்றும் புதிய தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய சப்ளை செயினாக உள்ளூர் கடைகள் அதாவது நம்ம ஊரு மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஆகியவற்றை முக்கியமானதாக பார்க்கிறது. எனவே இப்புதிய திட்டத்தின் படி 60 கோடி மக்களை ஈர்க்கும் புதிய திட்டத்தில் உள்ளூர் மளிகை கடைகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில், பொருட்களின் விற்பனை விலையில் கடைகளுக்கு அதிகப்படியான லாபத்தை (போட்டி நிறுவனங்களை காட்டிலும் அதிக லாபம்) வழங்குவதன் மூலம், சில்லறை வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்பதை அம்பானி டீம் நம்புகிறது. இந்த அதிகப்படியான லாபம் அல்லது கமிஷன் விரைவாக தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும், சில்லறை வணிகர்களுடன் நல்லுறவை வளர்ப்பதற்கும் உதவும் எனவும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிர்வாகம் நம்புகிறது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் 2015 முதல் எண்ணெய், எரிவாயு தாண்டி மாற்று வர்த்தகத்தை நோக்கி செல்ல துவங்கியது. இதில் ஒருபகுதியாக உருவாக்கப்பட்டது தான் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ், இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் துணை நிறுவனமாகும்.
ரிலையன்ஸ் ஜியோ எப்படி டெலிகாம் சேவைகளை வழங்குகிறதோ, அதேபோல் ரீடைல், உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் வர்த்தகத்திற்காக ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் உருவாக்கப்பட்டு 2022 இல் செயல்பாடுகளைத் தொடங்கியது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நாடுமுழுவதும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக குறுகிய காலத்திலேயே 15 க்கும் மேற்பட்ட பிராண்டுகளை கையகப்படுத்தியது. இதில், 2022 இல் சுமார் ரூ. 22 கோடிக்கு கையகப்படுத்தப்பட்ட புகழ்பெற்ற காம்பா குளிர்பானம் முக்கியமானது.
இதன் பின்பு சில் ஜாம் மற்றும் ஸ்ப்ரெட்ஸ், லோட்டஸ் சாக்லேட், டாஃப்மேன், Ravalgaon போன்ற இனிப்பு வகைகள், ஆலன்ஸ் பக்ல்ஸ் ஸ்னாக்ஸ், வெல்வெட் ஷாம்பு மற்றும் இன்டிபென்டன்ஸ் ஸ்டேபிள்ஸ் போன்ற ரிலையன்ஸ் சொந்த தயாரிப்புகளும் இதன் போர்ட்ஃபோலியோவில் சேர்ந்தது. இந்த கூட்டணி தான் தற்போது பெரும் சக்தியாக மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications