முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் கால் பதித்த துறைகளில் எல்லாம் வெற்றியை தான் ஈட்டியுள்ளது. அந்த வகையில் கூடிய விரைவில் குயிக் காமர்ஸ் பிரிவிலும் கால் பதிக்க இருக்கிறது.
பொதுவாகவே ரிலையன்ஸ் குழுமம் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால் தாமதமாக அந்தத் துறையில் நுழைந்தாலும் ,அதிக முதலீடு செய்வது ,போட்டி நிறுவனங்களை திக்கு முக்காடும் வகையில் சலுகைகளை அறிவிப்பது, வாடிக்கையாளர்களை பெறுவது, இதுதான் வர்த்தக உத்தியாக இருக்கும். அந்த வகையில் தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய குயிக்காமர்ஸ் துறை மீது தன் கவனத்தை திருப்பி இருக்கிறது .

இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களுக்கு சொந்தமாக இருக்கும் ரீடெய்ல் கடைகளில் எல்லாம் குயிக் காமர்ஸுக்கு ஏற்ற வகையில் கிடங்குகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் நான்காயிரம் பின்கோடுகளில் குயிக் காமர்ஸ் சேவையை வழங்குவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் தன்னை தயார்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய குயிக் காமர்ஸ் செயலியை பயன்பாட்டுக் கொண்டு வரும்போது டெலிவரி கட்டணம் கிடையாது மற்றும் 30 நிமிடங்களில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்ற அறிவிப்போடு வர இருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் தற்போது குயிக் காமர்ஸ் துறை தான் வேகமாக வளர்ந்து வருகிறது.
குறிப்பாக நகர்ப்புறங்களில் பொதுமக்கள் செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் செயலிகள் வாயிலாக வீட்டுக்கு தேவையான பால் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசிய பொருட்களையும் வாங்க பழகிவிட்டனர். இதன் காரணமாக கடைகளுக்கு நேரடியாக வந்து மக்கள் பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களுடைய சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை சரிவை கண்டுள்ளது.
எனவே தான் தங்களுடைய சில்லறை விற்பனை கடைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு குயிக்காமர்ஸ் சேவையை கொண்டு வருவதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது. பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான கிடங்குகளை அமைக்க வேண்டும், டெலிவரிக்கு ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் டெலிவரி பெறுவது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெற வேண்டும். அதற்கான ஆயத்த பணிகள் தான் நடைபெறுகின்றன.
பல்வேறு பகுதிகளிலும் சிறு சிறு கிடங்குகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்து வருகிறதாம். எனவே கூடிய விரைவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குயிக் காமர்ஸ் செயலி இந்திய சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஜியோ உள்ளிட்ட பல்வேறு நெட்வொர்க்குகளை கொண்டிருப்பதால் அதில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications