சமீபத்தில் மும்பையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட நபருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதில் மனித விரல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைக்கால நீக்கம் செய்தது. தற்போது அந்த ஐஸ் கிரீம் கோனில் இருந்த துண்டிக்கப்பட்ட மனித விரல் யாருடையது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
என்ன நடந்தது?: மும்பையில் உள்ள மலாட் எனும் பகுதியில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற மருத்துவர், உணவு விநியோக நிறுவனத்தின் மூலம் பட்டர்ஸ்காட்ச் ஐஸ் கிரீம்களை ஆர்டர் செய்திருக்கிறார். அவர் ஆர்டர் செய்த ஃபார்ச்சூன் டெய்ரிக்கு சொந்தமான Yummo ஐஸ்கிரீம்ஸில் இருந்து 3 ஐஸ்கிரீம்கள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

அந்த ஐஸ்கிரீம்களை வாங்கி ஆவலுடன் உண்ட மருத்துவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீமில் பாதியை சாப்பிட்ட அவருடைய நாக்கில் ஏதோ தவறாக தென்பட்டுள்ளது. அவர் அதனை கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் ஒரு மனித விரல் இருப்பதைக் கண்டார். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பேரதிர்ச்சியை கிளப்பியது. அதன் பிறகு அந்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்தின் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர் நடந்த சம்பவம் குறித்து ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை அதனால் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தெரிவித்தார்.
போலீசார், முதற்கட்ட விசாரணையில், அந்த ஐஸ்கிரீமில் இருந்த மனித விரலை, தடயவியல் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்போது அந்த விரல் அங்கு பணிபுரியும் நபருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் ஹெர்ஷே சாக்லேட் சிரப்பில், இறந்த நிலையில் ஒரு எலி இருந்தது மற்றும் பாலாஜி வேஃபர்ஸ் எனும் சிப்ஸ் பாக்கெட்டில் பொரித்தத் தவளை காணப்பட்டது. தொடர்ந்து இது போன்ற உணவுப் பொருட்களில் அருவருக்கத்தக்க விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுவது பொருட்களின் தரம் குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், முடிந்த வரையில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளையும், வீட்டில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களையும் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே தற்போது பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications