இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆடம்பர வீடுகளின் விற்பனை தாறுமாறாக உயர்ந்தாலும், சாமானிய மக்கள் வீடு வாங்குவது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அதிகப்படியான வட்டி விகிதம்.
இந்த நிலை ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தைக் குறைத்தால் மாறிவிடும் என்றாலும், பணவீக்கம், நாணய மதிப்பு, சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை ஆகிய அனைத்தும் இதற்குப் பெரும் தடையாக உள்ளது. அதிகப்படியான வட்டி என்பது ரியல் எஸ்டேட் துறையினரைப் பாதித்து வரும் வேளையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை ரியல் எஸ்டேட் சந்தையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பல ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வாங்குபவர்கள் விலையில் வெறும் 10 அல்லது 20 சதவீதத்தை மட்டுமே முன்பணமாகச் செலுத்தி, மீதமுள்ள தொகையை வீட்டை பெறும்போது அதாவது Possesion பெறும் போது செலுத்தும் வகையில் "Buy Now, Pay Later" திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
2015 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் மந்தமான சூழ்நிலையில் இந்த Buy Now, Pay Later திட்டங்கள் இருந்தது. இந்தத் திட்டம் புதிய வீடு வாங்குபவர்களை ஊக்குவித்தது.
ரியல் எஸ்டேட் துறையில் மந்தநிலையா?: கடந்த நான்கு ஆண்டுகளில், மும்பை ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய ஃப்ளாட் விற்பனை அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் புதிய கட்டுமான திட்டங்களின் அறிவிப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்தத் தடாலடி வளர்ச்சிக்கு ஜனவரி 2021 இல் மகாராஷ்டிர அரசு அளித்த அறிவிப்பே காரணம். இந்த அறிவிப்பின்படி, புதிய திட்டங்களுக்கு அனுமதி பெற, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 50 சதவீதத்தை அரசு தள்ளுபடி செய்தது.
இதனால் சந்தையில் புதிய வீடுகளின் சப்ளை அதிகமானது, அதேவேளையில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை மளமளவென உயர்த்திவிட்டு, பல காலாண்டுகளாகக் குறைக்காமல் அப்படியே வைத்துள்ளது. இதனால் வீட்டு கடன் வட்டி விகிதம் பல வருட உச்சத்திற்குச் சென்று வீடுகள் அதிகளவில் விற்கப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், பல மும்பை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் நெகிழ்வான கட்டண திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இதன் மூலம் Buy Now, Pay Later திட்டம் ரியல் எஸ்டேட் துறையில் தலைதூக்கத் துவங்கி சாமானிய மக்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
நாட்டின் முதன்மையான மும்பை ரியல் எஸ்டேட் சந்தையில் விற்பனை அளவுகள் சமீப மாதங்களில் மந்தமடைந்து வருவதும், மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய திட்டங்கள் அதிகரிப்பாலும், வீடுகளின் அதிகப்படியான இருப்பு நிலையும் தான் Buy Now, Pay Later திட்டம் வருவதற்கு முக்கியக் காரணமாகும்.
உதாரணமாக, தானே திட்டத்திற்கு, லோதா 25% முன்பணமும், இருப்பிட சான்றிதழை (OC) பெறும்போது 75% தொகை செலுத்தும் முறையைக் கொண்டு வந்துள்ளது. இதேபோல், ரேமண்ட் குழுமம் 20% முன்பணம், என ஒவ்வொரு முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் Buy Now, Pay Later திட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த Buy Now, Pay Later திட்டம் விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய பிற முக்கிய நகரங்களிலும் வர அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications