எந்த வேலையும் செய்ய வேண்டாம் தூங்கினா மட்டும் போதும் உங்களுக்கு லட்சக்கணக்குல பரிசு அப்படினு சொன்னா யார் தான் வேண்டாம்னு சொல்வாங்க. சும்மா சொல்ல, இப்படி தூங்கியே ஒரு இளம்பெண் 9 லட்சம் ரூபாயை சம்பாதிச்சு இருக்காங்க.
பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனமான Wakefit நிறுவனம் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் (Sleep Internship) என்ற போட்டியை நடத்தியது. 5ஆவது சீசனாக நடக்கும் இந்த போட்டியில் மும்பையை சேர்ந்த ஜினியா சட்டர்ஜி என்ற பெண் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். ஆழ்ந்து தூங்கியதற்காக இவருக்கு பரிசாக 9.6 லட்சம் ரூபாய் பணமும், நிறுவனத்தின் சார்பில் ஸ்பான்சர் செய்யப்பட்டு இலவச சுற்றுலா பயண கூப்பனும் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் வேலைக்காக தூக்கத்தை தியாகம் செய்யும் காலத்தில், முறையான மற்றும் நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சரியான தூக்க பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் Wakefit நிறுவனம் வித்தியாசமான இன்டர்ன்ஷிப் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறது. 5-வது சீசன் போட்டிக்காக இந்தியா முழுவதும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் 10 இறுதி போட்டியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு சிறப்பு மெத்தைகள் வழங்கப்பட்டன. அதில் தூக்கத்தை கண்காணிக்க கூடிய ஸ்லீப் டிராக்கர்களையும் (Sleep Trackers) பொருத்தி இருந்தது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொரு இரவும் சுமார் 9 மணி நேரம் தடையின்றி தூங்க வேண்டும். ஸ்லீப் டிராக்கர் மூலம் ஒவ்வொருவரின் தூக்கத்தின் தரம் கண்காணிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
60 நாள் போட்டியில் இறுதிக்கட்ட நிகழ்வில், போட்டியாளர்களின் ஒட்டுமொத்த தூக்க செயல்திறன் கணக்கிடப்பட்டது. குறிப்பாக, கடைசி இரவில் போட்டியாளர்கள் தூங்கிய விதம் மற்றும் பெற்ற ஸ்லீப் ஸ்கோர் (Sleep Score) வெற்றியாளரை தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தது. இதில் சிறந்த மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார் ஜினியா சட்டர்ஜி.
ஜினியா சட்டர்ஜி ஒரு பாடகி, கலைஞர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இருந்தாலும் தனது தூக்கத்தை அவர் விட்டு கொடுத்தது இல்லையாம். முறையாக தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த போட்டியில் வெற்றிகரமாக பங்கேற்று இறுதிவரை நிறைவு செய்த அனைவருக்கும் வரிப்பிடித்தத்திற்கு பிறகு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த ஸ்லீப் சாம்பியம் (Sleep Champion) பட்டத்தை வென்ற ஜினியா சட்டர்ஜிக்கு 9.6 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு மற்றும் இலவச பன்னாட்டு சுற்றுப்பயணம் பரிசாக வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications

