மும்பை: அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் செபியின் தலைவர் மற்றும் அவரது கணவருக்கும் பங்கு இருப்பதாகவும் புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று பங்குச்சந்தையில் அதானி குழுமத்துக்கு சொந்தமான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவை கண்டன.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைவது மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பலவும் அதானி குழும நிறுவன பங்குகளில் கணிசமான முதலீட்டை செய்துள்ளன.
அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 41,814 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதானி குழுமத்தை பொறுத்தவரை 11 நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகின்றன. அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி, அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸ், அதானி வில்மர் மற்றும் என்டிடிவி ஆகும்.
இந்த 11 நிறுவனங்களில் என்டிடிவியை தவிர மீதமுள்ள 10 நிறுவனங்களிலும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் கணிசமான முதலீட்டினை செய்துள்ளன. வேல்யூ ரிசர்ச் அமைப்பிடம் இருக்கும் தகவலின் அடிப்படையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் மட்டும் மியூச்சுவல் ஃபண்டுகள் 13,024.22 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.
அடுத்ததாக அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 8999 கோடி ரூபாய், ஏசிசி நிறுவனத்தில் 7668 கோடி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 7290 கோடி ரூபாய் என்ற அளவில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் முதலீடு செய்துள்ளன.
மொத்தமாக அதானி குழுமத்துக்கு சொந்தமான 10 நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மொத்தமாக செய்துள்ள முதலீடு 41,814 கோடி ரூபாய். இதில் பாசிவ் ஃபண்டுகள் 11,777.36 கோடி ரூபாய் ஆகும், ஆக்டிவ் ஃபண்டுகளின் மதிப்பு 30,336 கோடி ரூபாய் ஆகும்.
இதில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை 111 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் 13024 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இதில் பாசிவ் ஃபண்டுகளின் மதிப்பு 56 சதவீதம் ஆகும். குறிப்பாக எஸ்பிஐ நிஃப்டி 50 இடிஎஃப் ஃபண்டு அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் 1520 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதே போல ஏசிசி, அதானி வில்மர் நிறுவனங்களிலும் எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, கோடக், குவாண்ட், ஆதித்யா பிர்லா உள்ளிட்ட நிறுவனங்கள் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளன. எனவே ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவன பங்குகள் சரிவடையும்போது இந்த மியூச்சுவல் ஃபண்டு யூனிட்களின் மதிப்பும் குறையும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications