ஒருவர் தன்னுடைய இறப்புக்குப் பிறகு தான் செய்து வைத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் யாரை சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாமினியை நியமிக்கலாம். ஆனால் சில நேரங்களில் அந்த நாமினிக்கு முழு தொகையும் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்தவர் நாமினியை நியமித்திருந்தாலும் இந்தியா வாரிசுரிமைச் சட்டத்தின் படி முதலீடு பிரித்து வழங்கப்படலாம். இது போன்ற சம்பவம் எந்தெந்த நேரத்தில் நிகழும்? இறந்தவருக்கு 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் என்ன நடக்கும்? என்ற விவரங்களை பார்ப்போம்.
பொதுவாக முதலீடு செய்யும் நபர் நாமினியை நியமித்திருந்தால் அவருடைய இறப்புக்கு பிறகு அந்த நாமினிக்கே முழு தொகையும் வழங்கப்படும். ஆனால் எல்லா நேரங்களிலும் இதுபோல பணத்தை நாமினிக்கு மட்டும் வழங்க முடியாது.

உதாரணமாக முதலீடு செய்யும் நபருக்கு 3 குழந்தைகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரே ஒரு குழந்தையை மட்டும் நாமினியாக நியமித்திருக்கிறார் என்றால் அவருடைய இறப்புக்கு பிறகு மீதமுள்ள குழந்தைகளுக்கும் முதலீட்டு தொகையை பிரித்து வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஏனெனில் முதலீடுகள், சொத்துக்கள் போன்றவை ஒருவர் நியமித்த நாமினி, அவர் எழுதி வைத்த உயில் ஆவணம் மற்றும் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். நாமினி என்பவர் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருப்பவர்.
உதாரணமாக திருமணம் ஆகாமல் இருக்கும்போது பெற்றோரை நாமினியாக நியமிக்கலாம் அல்லது சகோதர சகோதரிகளை நாமினியாக நியமிக்கலாம். அதுவே திருமணத்திற்கு பிறகு துணையை நாமினியாக நியமிக்கும் வாய்ப்புள்ளது.
சில நேரங்களில் நாமினியை மாற்றுவதற்கு மறந்து விடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் அந்த உயிலில் முதலீட்டு தொகையை யாருக்கெல்லாம் வழங்க வேண்டும்? என்று அவர் கூறியிருக்கிறாரோ அதற்கேற்ப பிரித்து வழங்கப்படும். இறந்தவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தால் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அந்த முதலீட்டில் தனது பங்கை கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு.
நாமினி Vs சட்டப்பூர்வ வாரிசுகள்.. இதில் யாருக்கு மியூச்சுவல் ஃபண்ட் பணம் சேரும்?: முதலீடு செய்தவரின் இறப்புக்குப் பிறகு அந்த முதலீட்டு தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் நாமினி. ஆனால் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தொகையை பெறுவதற்கு தகுதியுள்ளவர் சட்டப்பூர்வ வாரிசுதாரர். அதேபோல இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் அந்த ஆவணத்தில் உள்ள பயனாளியும் சட்ட விதிகளுக்குட்பட்டு முதலீட்டு தொகையைப் பெற உரிமை பெறுகிறார். அதிலும் பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தையை மட்டும் நாமினியாக நியமித்து விட்டு பிற வாரிசுகளை விட்டுவிடும்போது இதுபோன்ற விதிகளின் கீழ் பிற வாரிசுகளும் சம பங்கு பெற உரிமை இருக்கிறது.
உதாரணமாக ஒரு பெற்றோர் ரூ.50 லட்சம் மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை வைத்திருக்கின்றனர். இப்போது ஒரே ஒரு குழந்தையை மட்டும் நாமினியாக நியமித்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் உயில் ஆவணத்தில் முதலீடு மூன்று குழந்தைக்கு சம பங்காக பிரிக்கப்பட வேண்டும் என்றிருந்தால் நாமினியாக உள்ள குழந்தை மட்டுமே முழுமையாக பெற முடியாது. மற்ற குழந்தைகளுக்கும் பிரித்து வழங்கப்பட வேண்டும். உயில் ஆவணம் இருந்தால் இறந்தவர் செய்த முதலீடுகள் அந்த ஆவணத்தின் படியே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உயில் ஆவணம் எதுவும் இல்லை என்றால் முதலீடுகள் அனைத்தும் இறந்தவருடைய சொத்தாக கருதப்படும். சட்டபூர்வ வாரிசுரிமைச் சட்டத்தின் படி பிரித்து வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications
