பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வீட்டு வாடகை மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பதாக வாடகைதாரர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
இந்தியாவின் ஐடி தலைநகரமாக கருதப்படும் பெங்களூருவில் வீட்டு வாடகை மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளன. இதனால் வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்துள்ளன. இருந்தாலும் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வீடுகளின் வாடகை மதிப்பை குறைக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார்கள்.

இதனால் பெங்களூருவில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக அளவு வீட்டு வாடகை செலுத்துவதாக புலம்புகின்றனர். பெங்களூருவில் வேலை செய்யக்கூடிய ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " எனக்கு 7.5 சதவீதம் தான் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது, ஆனால் என்னுடைய வீட்டு உரிமையாளர் வீட்டு வாடகையை 10 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
இப்படியே சென்றால் இன்னும் சில காலத்தில் என்னுடைய சம்பளத்தை விட என் வீட்டின் வாடகை அதிகமாக இருக்கும் என புலம்பி இருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது . பலரும் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகை என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றனர் என தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளது.
ஒரு பயனர் இது நவீன நகர்ப்புற மோசடி எனக் கூறியிருக்கிறார். ஒரு பயனர் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஐடி ஊழியர்களின் நிலைமை இதுதான் எனக் கூறியுள்ளார், பலரும் நாம் வாங்கக்கூடிய சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கும் மீதி வரிக்குமே சென்று விடுகிறது என புலம்பியுள்ளனர். அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக பெங்களூருக்கு செல்வது நமக்கு எந்தவித லாபமும் தராது ஏனெனில் நாம் வாங்கக்கூடிய சம்பளம் வீட்டு வாடகைக்கு சென்று விடும் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
ஒரு பயனர் பெங்களூருவில் செயல்படும் நிறுவனங்கள் அந்த நகரத்தின் வீட்டு வாடகை மதிப்பை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். சிலர் நாங்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி வீட்டு வாடகைக்கும் மீதி வரிக்கும் சென்று விடுகிறது என கூறியுள்ளனர்.
இந்தியாவில் வீட்டு வாடகை மதிப்பு அதிகமாக உயரும் நகரங்களில் மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு இருக்கிறது. ஒயிட்ஃபீல்டு, கோரமங்கலா உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை 50,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறதாம்.


Click it and Unblock the Notifications