இந்தியாவில் பேஷன் சம்பந்தப்பட்ட இ காமர்ஸ் பிரிவு வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம் செல்போனில் இருக்கும் ஒரு செயலி வாயிலாகவே நமக்கு தேவையான ஆடைகள், காலணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து நாம் பெற்று கொள்ள முடிகிறது.
அந்த வகையில் இந்தியாவில் பேஷன் இ காமர்ஸ் செயலிகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதில் மிந்த்ரா நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 2007ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட பேஷன் இ காமர்ஸ் நிறுவனம் தான் மிந்த்ரா. 2014ஆம் ஆண்டு இதனை பிளிப்கார்ட் நிறுவனம் கைப்பற்றியது. பின்னர் இது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் சென்றது.

இந்நிலையில் மிந்த்ரா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து மிந்த்ரா நிறுவனத்தின் மீதும் அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறி 1,654 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை இந்த வழக்கினை பதிவு செய்திருக்கிறது.
இந்திய வர்த்தகர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்தியாவில் மொத்த விற்பனை தொழில்களில் ஈடுபடக் கூடாது என்றும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட், மிந்த்ரா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்களை வாங்குபவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் இடையிலான ஒரு மார்க்கெட் பிளேஸ் ஆக மட்டுமே செயல்பட முடியும். இந்த நிறுவனங்கள் பொருட்களை வாங்கி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

ஆனால் மிந்த்ரா நிறுவனம் இந்த விதிமுறையை தான் மீறி இருக்கிறது. மிந்த்ரா நிறுவனம், பொருட்களை மொத்தமாக வாங்கி உடனடியாக பணத்தை செலுத்தும் முறையில் (Wholesale Cash & Carry) வணிகம் செய்வதாக கூறிவிட்டு பல நிறுவனங்களின் பொருட்களை ஒரு நிறுவனத்தின் பெயரில் வாங்கி நேரடி சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதாக (Multi-Brand Retail Trade ) தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மிந்த்ரா நிறுவனத்தின் வணிக நடைமுறைகளை ஆய்வு செய்துள்ளனர் .
அப்போது மொத்த வணிகம் என்ற பெயரில் மித்ரா நிறுவனம் 1654.35 கோடி ரூபாயை அந்நிய நேரடி முதலீடாக பெற்றுள்ளது. ஆனால் அந்த பணத்தை கொண்டு மொத்த வணிகத்தில் ஈடுபடாமல் வெக்டர் ஈ காமர்ஸ் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது 25 %க்கும் அதிகமான பொருளை வெக்டர் நிறுவனம் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிந்த்ராவும், வெக்டரும் ஒரு குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம். இதன் அடிப்படையில் மிந்த்ரா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே தங்கள் மீதான புகார் குறித்து அமலாக்க துறை அதிகாரிகளிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ நோட்டீஸும் ஆவணங்களும் தங்களுக்கு வரவில்லை என மிந்த்ரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எந்த ஒரு விசாரணைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு தருவோம் என்றும் விளக்கம் தந்துள்ளது .


Click it and Unblock the Notifications