பெங்களூரு: இந்தியாவின் பிரபலமான மைசூர் சாண்டல் சோப் தயாரிக்கும் நிறுவனம் கர்நாடக அரசுக்கு ஈவு தொகையாக மட்டும் 108 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
கர்நாடகா அரசுக்கு சொந்தமாக தி கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடெர்ஜன்ட்ஸ் லிமிடெட் (கேஎஸ்டிஎல்) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்தான் புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பினை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் இந்த நிறுவனம் வரலாறு காணாத வருமானத்தை ஈட்டி உள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் ஈவுத்தொகையாக மட்டும் 108 கோடி ரூபாயை கர்நாடகா அரசுக்கு காசோலையாக வழங்கியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த காசோலை முதலமைச்சர் சித்தராமையாவிடம் வழங்கப்பட்டது . அப்போது கேஎஸ்டிஎல் நிறுவனத்தின் தலைவர் நாடா கவுடாவும் உடன் இருந்தார் . 2023-24 ஆம் நிதி ஆண்டில் கேஎஸ்டிஎல் நிறுவனம் 362.07 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது. இதில் 30 சதவீதம் தொகையை ஈவு தொகையாக அரசுக்கு வழங்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வளவு அதிக தொகை ஈவுத்தொகையாக வழங்கப்படுகிறது. அது தவிர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாயும் இந்த நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் 15.91 கோடி ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியது. தற்போது அது 108 கோடியாக அதிகரித்துள்ளது ஐந்து ஆண்டுகளில் கேஎஸ்டிஎல் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
கேஎஸ்டிஎல் நிறுவனம் இந்திய சந்தை மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் கால் பதித்து சிறப்பாக செயல்படுகிறது என்றும் இன்னும் வரக்கூடிய காலங்களில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் உலகமெங்கும் அதிக அளவில் விற்பனையாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கேஎஸ்டிஎல் நிறுவனம் கர்நாடகாவின் தொழில்துறையிலும் முக்கியமான நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் உற்பத்தி விற்பனை மற்றும் லாபம் மாநில ஜிடிபி வளர்ச்சியிலும் பெரிய பங்களிப்பைத் தரும். 2024 மார்ச் மாத நிலவரப்படி கேஎஸ்டிஎல் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 1570 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இவ்வளவு அதிகபட்ச வருமானத்தை ஈட்டியது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23இல் 1375 கோடி ரூபாயை இந்த நிறுவனம் வருமானமாக ஈட்டி இருந்தது. தற்போது அதை விட கூடுதலாக 195 கோடியை வருமானமாக பெற்றுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications