தமிழ்நாட்டில் இன்றளவும் மைசூர் சாண்டல் சோப்பை விரும்பி குளிக்கும் குடும்பங்கள் உள்ளன. மைசூர் சாண்டல் சோப் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் தயாரிப்பாகும். இந்நிலையில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதிலும் சுமார் 480 புதிய விநியோகத்தர்களை சேர்த்து தனது அடையாளத்தை விரிவுபடுத்தவுள்ளது. இதுவரை தென்னிந்தியர்களிடையே பிரபலமாக இருந்த இந்த மைசூர் சாண்டல் பிராண்ட் தற்போது ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதன் சந்தை இருப்பை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.
ஓவல் வடிவத்தில் இருக்கும் இந்த மைசூர் சாண்டல் சோப்பு கடந்த 40 ஆண்டுகளாக ஒரே லோகோ மற்றும் பேக்கேஜிங் உடன் இருந்து வருகிறது. சிவப்பு மற்றும் பச்சை நிற அட்டைப்பெட்டிக்குள் "100% தூய சந்தன எண்ணெய் கொண்ட ஒரே சோப்பு" என்ற டேக்லைனுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டில் அதன் பிராண்டிங்கை புதுப்பிக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதனால் லோகோ மற்றும் புதிய டேக்லைனுடன் சோப் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

KSDL நிறுவனத்தின் விற்பனையில் 81% தென் மாநிலங்களில் இருந்து வருகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சோப் தயாரிக்கப்படும் கர்நாடகா மாநிலம் மைசூர் சாண்டல் சோப்பின் முன்னணி நுகர்வோர் கிடையாது. ஆந்திர பிரதேசம் தான் மைசூர் சாண்டல் சோப்பின் முன்னணி நுகர்வோராக இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. கர்நாடகா 3-வது இடத்தில் தான் உள்ளது.
இந்நிலையில் 108 ஆண்டுகள் பழமையான பப்ளிக் செக்டார் நிறுவனம், மைசூர் சாண்டல் பிராண்டின் தடத்தை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் அகர்பத்திகள் முதல் கிளீனர்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை தயாரிக்கிறது. இருந்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மைசூர் சாண்டல் சோப்பையே அதிகம் விரும்புகின்றனர் என்று கேஎஸ்டிஎல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான டாக்டர் பிரசாத் பி.கே.எம் கூறியுள்ளார்.
மார்ச் 2024-ஆம் ஆண்டில் KSDL நிறுவனம் 1500 கோடி டர்ன் ஓவரை எட்டியுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிக அதிகமான டர்ன் ஓவராகும். KSDL அதிகாரிகளின் கூற்றுப்படி தங்களுடைய தயாரிப்புகளை பன்முகப்படுத்தி சிறந்த மார்க்கெட்டிங் யுக்திகளை கையாண்டது தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications