நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து, கோயம்புத்தூர் கல்லூரியில் படித்து இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக சந்திரசேகரன் 2வது முறையாக பதவி நீட்டிப்பு பெற்று, இக்குழுமம் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
டாடா குழுமத்தில் 10 - 15 வருடத்திற்கு முன்பு பல வர்த்தக பிரிவு நஷ்டத்திலும், பெரிய அளவிலான நிதி செலவுகளையும் கொண்டு இருந்தது. ஆனால் சந்திரசேகரன் நிர்வாகத்தை கையில் எடுத்த சில வருடத்தில் அனைத்தையும் சரி செய்து தற்போது லாபத்தை அள்ளித்தரும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதோடு, அதிகப்படியான வர்த்தக விரிவாக்கத்தையும் செய்து வருகிறது.

இந்த நிலையில் சந்திரசேகரன் மாரத்தான் ஒடுவதில் தீரா காதல் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும், மேலும் மும்பையில் முகேஷ் அம்பானி வீடு இருக்கும் அதே தெருவில் வசித்து வரும் சந்திரசேகரன் தினமும் காலையில் ஜாக்கிங் செல்வது வழக்கம்.
இந்த தருணத்தில் நடந்த சம்பவத்தை நேற்று மாலை நடந்த B20 Summit India 2023 கூட்டத்தில் கூறியுள்ளார். இவர் சொன்ன செய்தி எந்த அளவுக்கு இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மக்கள் மத்தியில் பின்னிப் பிணைந்து உள்ளது என தெரிகிறது.
சந்திரசேகரன் இக்கூட்டத்தில் பேசுகையில் தினமும் காலை ஜாக்கிங் செல்லும் போதும் இளநீர் குடிப்பது வழக்கம், இளநீர் விற்பவர் பணம் வாங்க விரும்புவது இல்லை, போன்பே-வா கூகுள் பே-வா என கேட்கிறார். இந்தியாவில் யூபிஐ அறிமுகமும், அதன் வளர்ச்சியும் பணத்தை நம்பியிருக்கும் நிலையில் குறைந்து cashless பரிமாற்றத்தை பிரதானமாக கொண்ட நாடாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் பேமெண்ட் துறையில் இறங்குவதற்காக டாடா நியூ செயலியை மெருகேற்றி வரும் வேளையில், இளநீர் கடைக்காரர் உடனான அவரது சந்திப்பு யூபிஐ முக்கியதுவத்தையும் அதன் ஆதிக்கத்தையும் காட்டுகிறது.
யூபிஐ பேமெண்ட் முறை மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலையோர வியாபாரிகள் வரையில் யூபிஐ பேமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இதை விட முக்கியமாக குறைந்தது 2 அல்லது 3 QR பேமெண்ட் முறைகளை அனைத்து கடைக்காரர்களும் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications