மும்பை: இந்தியாவில் பல பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் வாரிசு கைகளுக்கு மாறி வருவது போல், பல சாம்ராஜ்ஜியங்களுடைய குடும்பத்திற்கு மத்தியில் பிரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பேமஸ் ஆன கோத்ரேஜ் குழுமம் தற்போது இரண்டாக உடைந்துள்ளது.
127 ஆண்டுகளாக சோப்பு, வீட்டு உபகரணங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல்வேறு துறைகளில் இயங்கி வரும் கோத்ரேஜ் குழுமம் 2ஆக பிரிவதாக அறிவித்துள்ளது. இதில் கோத்ரேஜ் குடும்பத்தின் முக்கிய முகங்களாக இருக்கும் ஆதி கோத்ரேஜ் மற்றும் அவரது சகோதரர் நாதீர் கோத்ரேஜ் ஆகியோர் 5 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களைக் கொண்ட கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளனர்.

இதில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் தலைவரான் நாதிர் கோத்ரேஜ் மும்பையில் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று அபார்ட்மெண்ட்களை வாங்கி இருக்கிறார். ஜேஎஸ்டபிள்யூ ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து அவர் இந்த குடியிருப்புகளை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
மும்பையில் பணக்கார பகுதியாக காணப்படும் மலபார் ஹில்ஸின் ருபாரஸ் ஹவுஸ் பகுதியில் 13,831 சதுர அடி கொண்ட அபார்ட்மெண்ட்டை இவர் வாங்கியுள்ளார். இங்கே ஒரு சதுர அடியின் மதிப்பு 1.3 இலட்சம் ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மூன்று அபார்ட்மெண்டிலும் கார்பெட் ஏரியா என்பது 4,610 சதுர அடி ஆகும். இவை 6,7,8 ஆகிய தளங்களில் அமைந்துள்ளன. ஜூன் 12ஆம் தேதி இது தொடர்பான விற்பனை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அபார்ட்மெண்ட்க்கும் கோத்ரேஜ் 3.5 கோடி ரூபாயை பதிவு கட்டணமாக செலுத்தி இருக்கிறார். மலபார் ஹில்ஸ் என்பது இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாகும். மும்பையில் உள்ள மிகவும் காஸ்ட்லியான ஒரு பகுதி என்றும் சொல்லலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகள் மிகப்பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. சாவல் இந்தியா நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில் மலபார் ஹில்ஸ், பல்கேஸ்வர் மற்றும் நீபியன் சாலை ஆகிய தெற்கு மும்பை பகுதிகளில் பல்வேறு மறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த மார்ச் மாதம் கூட புகழ்பெற்ற இந்திய முதலீட்டாளரான ரேகா ஜூன்ஜூன்வாலா மலபார் ஹில்ஸ் பகுதியில் ஒரு கட்டிடத்தின் அனைத்து குடியிருப்புகளையும் விலை கொடுத்து வாங்கினார். பிராமல் கேப்பிட்டல் இந்தியாவின் முன்னணி முதலீட்டு மற்றும் வர்த்தக நிறுவனம். இதன் இயக்குனரான ஆசா முகுல் அகர்வால் 253 கோடி ரூபாய் கொடுத்து 3 அபார்ட்மெண்டுகளை வாங்கினார்.
73 வயதாகும் நாதிர் கோத்ரேஜ், இந்தியாவின் புகழ்பெற்ற கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்தவர். கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் கோத்ரேஜ் அக்ரோவேட் நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் ஐஐடி மும்பை, எம்ஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். இவரது சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications