இந்திய - சீன எல்லையில் இரு நாட்டின் ராணுவ வீரர்கள் மத்தியில் தாக்குதலுக்குப் பின்பு மோடி தலைமையிலான மத்திய அரசு, சீன முதலீடுகளையும், சீன நிறுவனங்களையும் குறிவைத்து மொத்தமாகத் தடை செய்து வந்தது. குறிப்பாகச் சீன முதலீடுகளை 360 கோணத்திலும் இந்தியச் சந்தைக்குள் வருவதைத் தடுத்து வந்தது.
இந்த நிலையில் மோடியின் 3வது ஆட்சியில் முதல் வாரத்திலேயே சீனா நிறுவனங்களுக்கு இந்திய மண்ணில் அடியெடுத்து வைக்க கதவுகளைத் திறக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி நிறுவனங்கள் (Joint Ventures - JVs) அமைப்பதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி நிறுவனத்தில் இந்திய நிறுவனம் பெரும்பான்மை பங்கு (Majority Shareholding) கொண்டிருப்பது கட்டாய விதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் நான்கு தலைமை அதிகாரிகள், சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் கூட்டணி நிறுவனத்தைத் தொடங்க விரும்புவதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோடி அரசு இந்த கோரிக்கையை எப்படி ஏற்கப்போகிறது என்பதில் தான் இந்திய மண்ணில் சீன நிறுவனங்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) அதிகாரிகள், சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுவனங்கள் கூட்டணி நிறுவனங்களை அமைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சில திட்டங்கள் கடந்த சில வருடங்களாகத் தேங்கி இருந்தன. இந்த நிலையில் தான் சீனாவின் SAIC குழுமத்தின் எம்.ஜி மோட்டார் இந்தியா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ இடையேயான கூட்டணி நிறுவன ஒப்பந்தம் மற்றும் அரசின் நிலைப்பாடு ஆகியவை காரணமாக, இந்திய நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் மீண்டும் கூட்டணி நிறுவனம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.
இதுபோன்ற கூட்டணி நிறுவனங்களுக்கு உதவ அரசு விருப்பம் கொண்டிருந்தாலும், எந்தவொரு கூட்டணி நிறுவனமும் பிரஸ் நோட் 3 விதிமுறைகளின் கீழ் அனுமதி பெற வேண்டும் என்று DPIIT அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதேவேளையில், இந்தியா - சீனா கூட்டணி நிறுவனத்தில் பங்குதாரர் உரிமை குறித்து அரசின் தெளிவான தகவல் இல்லாமல் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளச் சீன நிறுவனங்கள் தயங்குகின்றன, இது கூடுதல் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
உள்நாட்டு கார் பாகங்கள் உற்பத்தியாளரான யுனோ மிண்டா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகன பாகங்கள் உற்பத்திக்கான தொழில்நுட்ப உரிமத்திற்காக (technical licensing) சீனாவின் சூஜோவ் இனோவன்ஸ் ஆட்டோமோட்டிவ் கம்பெனி (Suzhou Inovance Automotive) நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த சீன நிறுவனத்துடன் கூட்டு நிறுவனம் அமைப்பதையும் யுனோ மிண்டா பரிசீலித்து வருகிறது.
இது எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் JSW கூட்டணிக்குப் பின்பு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு, டாடா குழுமத்தின் ஏசி தயாரிப்பு நிறுவனமான Voltas தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவின் Highly International உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தது. இந்த கூட்டணி நிறுவனத்தில் சுமார் 60 சதவீத பங்குகளை டாடா வைத்திருக்கும் வகையில் திட்டமிட்டு இருந்தாலும், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் கூட்டணி முயற்சியைக் கைவிட்டது.


Click it and Unblock the Notifications