இந்திய அஞ்சல் துறை பொது மக்களுக்காக பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. இது சாமானிய மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற காரணத்தினால் குறைந்த முதலீட்டில் பல நல்ல திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. பொது மக்களின் முதலீட்டுத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகிறது. அஞ்சல் நிலைய திட்டங்கள் பொது மக்களிடையே பிரபலமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வருமான வரிச் சட்டம் 80C-இன் கீழ் வரும் வரி விலக்கு. இன்றையப் பதிவில் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்களில் கொடுக்கப்படும் முதலீட்டு திட்டங்கள், பொதுவாக பாதுகாப்பானதாக இருக்கும் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது. அதன் அடிப்படையில் எதிர்காலத்திற்கு நிலையான வருமானத்தைப் பெற விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமானதாக இருக்கும்.

NSC திட்டத்தின் விவரங்கள்: தேசிய சேமிப்புச் சான்றிதழில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் தற்போது 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு எந்தவித உச்ச வரம்பும் இல்லை. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். அரசு நடத்தும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
NSC திட்டத்தில் குறைந்தபட்சத் தொகையாக ரூ. 1,000 முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ், 2 அல்லது 3 பேர் சேர்ந்து முதலீடு செய்ய ஒரு கூட்டுக் கணக்கைத் திறக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளைத் திறக்கலாம்.
உதாரணமாக NSC திட்டத்தில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்தால், 7.7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.4,490 வட்டியாகப் பெறலாம். முதிர்வு காலத்தின் போது மொத்தம் ரூ. 14,490 கிடைக்கும்.
அதேபோல, நீங்கள் NSC திட்டத்தில் ரூ. 15,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் 5 வருட முதிர்வு காலத்தில் 7.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், உங்களுக்கு வட்டியாக ரூ. 6,736 கிடைக்கும். முதிர்வு காலத்தின்போது நீங்கள் ரூ. 21,736 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
NSC திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம், மூத்த குடிமக்கள் ஐடி அல்லது ஏதேனும் அரசாங்க சான்றுகள் தேவைப்படும். இதற்கு வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?: HUF-கள், NRI-கள் ஆகியோர் NSC திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
NSC திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?: முன்பு, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் NSC சான்றிதழ்களை வழங்கியது. இது 2016-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. தற்போது, மின்னணு முறையில் (e-mode) அல்லது பாஸ்புக் கொண்டு சான்றிதழ்களை வாங்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்களில் NSC திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications