இன்றெல்லாம் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை. முன்னர் சைக்கிளை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது ஸ்கூட்டர், கார் போன்றவற்றுக்கு மாறியுள்ளனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சாலையில் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு பணமில்லாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதைச் சரி செய்யும் விதமாக நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததாக PTI செய்து வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிக்கையின் படி "கேஷ்லெஸ் ட்ரீட்மென்ட் ஆஃப் ரோடு ஆக்ஸிடெண்ட் விக்டிம்ஸ் ஸ்கீம் 2025" என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சையை மருத்துவமனைகளில் பெறலாம்.
மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பலனடையலாம். எந்த சாலையில் விபத்து நடந்திருந்தாலும் சரி, இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லாமல் சிகிச்சை பெறலாம். இதனை சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் 2025-ஆம் ஆண்டின் மே 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படும் நபர்களுக்கு புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். தற்போது இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தேசிய சுகாதார ஆணையம், காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படவுள்ளது.
இது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வருவதனால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை பெறலாம். விபத்து நடந்தவுடன் உடனடியாக சிகிச்சை கிடைப்பதால், உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்கு விபத்து நடந்தாலும் எளிதில் சிகிச்சை கிடைக்கும். விபத்தில் பாதிக்கப்படும் நிதி ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு மருத்துவச் செலவுகள் பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்தத் திட்டம் அந்தச் சுமையைக் குறைக்கும்.
எந்தெந்த மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை கிடைக்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். எது எப்படியோ இது போன்ற திட்டங்களின் கீழ் சாமானியர்கள் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications